பேங்காக்: தாய்லாந்தில் ஆறு விமான நிலையங்கள் வாயிலாக அந்நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகள் விரைவில் முக அடையாள முறைச் சோதனைவழி (biometric identification system) குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளைக் கடக்க முடியும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகளுக்கும் இந்த முறை பொருந்தும்.
முக அடையாள சோதனை முறை முதலில் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) உள்நாட்டுப் பயணிகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அம்முறை அனைத்துலகப் பயணிகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
தாய்லாந்தின் விமான நிலைய ஆணையத்தின் இயக்குநர் கிராட்டி கிட்மானாவாத் இத்தகவலை வெளியிட்டார் என்று பேங்காக் போஸ்ட் (Bangkok Post) ஊடகம் தெரிவித்தது.
இந்த மாற்றத்தின்கீழ் பயணிகள் தங்கள் பெட்டிகளை ஒப்படைத்த பிறகு விமானத்தில் ஏறும் நுழைவாயிலுக்குச் செல்ல கடப்பிதழ், விமான நுழைவு அட்டை (boarding pass) இல்லாமல் இரு வழிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் சம்பந்தப்பட்ட பயணியின் முக அடையாள, பயணத் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும்.
தலைநகர் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையம் மற்றும் டோன் மியூங் அனைத்துலக விமான நிலையம், சியாங் மாய் அனைத்துலக விமான நிலையம், மே ஃபா லுவாங் / சியாங் ராய் அனைத்துலக விமான நிலையம், புக்கெட் அனைத்துலக விமான நிலையம், ஹாட் யாய் அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றில் முக அடையாள முறைச் சோதனை செயல்படுத்தப்படும்.