தாய்லாந்து செல்லும் சிங்கப்பூரர்கள் இனி ‘இடிஏ’ சமர்ப்பிக்க வேண்டும்

2 mins read
370868c0-cedf-43fb-b52c-d0466d97d8ff
தாய்லாந்து செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களும் விசா தேவைப்படாத 92 நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் விரைவில் ‘இடிஏ’ சமர்ப்பிப்பது கட்டாயமாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

தாய்லாந்து செல்ல விரும்பும் சிங்கப்பூரர்கள் விரைவில் ‘இடிஏ’ (Electronic Travel Authorisation) எனப்படும் இணையவழிப் பயண அனுமதியைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா தேவைப்படாத மேலும் 92 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் இது பொருந்தும்.

இதற்கான முன்னோடித் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கக்கூடும் என்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் முன்னோடித் திட்டத்துக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த நடைமுறை முழுமையாக நடப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அனைத்துலகப் பயணிகளுக்கு இத்தகைய நடைமுறையை எவ்வாறு சிறப்பான முறையில் அறிவிக்கலாம் என்பது குறித்துத் தாய்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்திவருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘இடிஏ’ அனுமதிக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரையும் சேர்த்து மொத்தம் 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்போது விசா தேவையின்றித் தாய்லாந்திற்குச் செல்ல முடியும். இவ்வாறு செல்லும் சுற்றுப்பயணிகள் 60 நாள்கள் வரை அங்குத் தங்கியிருக்கலாம். இத்தகையோர் இனி ‘இடிஏ’ அனுமதியைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தாய்லாந்து செல்வதற்குமுன் இணையத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும், மலேசியா, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் இவ்வாறு ‘இடிஏ’ அனுமதியைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று ‘த ஸ்டார்’ நாளேடு பல்வேறு தரப்புகளை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டுள்ளது.

அரசதந்திர, அலுவல் நிமித்தமான கடப்பிதழ் வைத்திருப்போர், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பயண ஆவணத்தை வைத்திருப்போர் போன்றோரும் ‘இடிஏ’ சமர்ப்பிக்கத் தேவையில்லை.

குறிப்புச் சொற்கள்