தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகளவில் விரிவுபடுத்தப்படும் சிங்கப்பூரின் ‘ஏஐ’ திட்டம்

2 mins read
87ab926b-57c1-4a4d-b480-16a7ec80cc8c
‘ஏஐ’ மூலம் குழந்தை நலனை ஆராயும் பிலிஎஸ்ஜி (BiliSG) செயலியின் சாவடியில் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். - படம்: தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை (ஜென்ஏஐ) பயன்படுத்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஓர் அறிக்கையும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வளரும் நாடுகளில் ஏஐ புரிதலை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் ஏஐ சிங்கப்பூர் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த ஒப்பந்தம்வழி தேசிய அளவில் ஏஐ திறனை மேம்படுத்த ஏஐ சிங்கப்பூர் 2024ல் தொடங்கிய ஏஐ4குட் முன்னோடித் திட்டம், ஆசியாவிலிருந்து அனைத்துலக அளவிற்கு விரிவாக்கப்படும். ஏஐயைக் கற்பிக்க கல்வியாளர்களுடன் இணைந்து வளங்கள் உருவாக்கப்படும்.

ஏடிஎக்ஸ் உச்சநிலை மாநாட்டில் வியாழக்கிழமை (மே 29) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் இவற்றை அறிவித்தார்.

ஏடிஎக்ஸ் உச்சநிலை மாநாட்டில் ஏஐ4குட் முன்னோடித் திட்டத்தின் விரிவாக்கம், ஜென்ஏஐ தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கை, தொகுப்புகள் குறித்துப் பேசிய மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்.
ஏடிஎக்ஸ் உச்சநிலை மாநாட்டில் ஏஐ4குட் முன்னோடித் திட்டத்தின் விரிவாக்கம், ஜென்ஏஐ தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கை, தொகுப்புகள் குறித்துப் பேசிய மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். - படம்: தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்

அந்த ஒப்பந்தம்வழி, தென்கிழக்காசிய நாடுகள், கரீபிய, பசிபிக் தீவுகள் ஆகியவற்றுக்கு ஏஐ கற்றல் விரிவாக்கப்படும்.

“உலக ஏஐ கட்டமைப்புக்குப் பங்காற்ற நாம் விரும்புகிறோம். அதனால், ஏஐயைப் பொறுத்தவரை நமக்கு மட்டுமன்றி உலகத்துக்கும் நம்பகமான உறுப்பினராக நாம் திகழ வேண்டும்.

“அதனால்தான் இவ்வாண்டு தொடக்கத்தில் ‘ஏஐ வெரிஃபை’ அறக்கட்டளையும் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் அனைத்துலக ஏஐ உத்தரவாத முன்னோடித் திட்டத்தைத் துவங்கிவைத்தன.

“இத்திட்டம்வழி ஜென்ஏஐ பயன்பாட்டு வாய்ப்புகளைக் கொண்டுவரும் நிறுவனங்களால் நிபுணத்துவ ஏஐ சோதனையாளர்களை அணுகமுடிகிறது. சில மாதங்களிலேயே 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளன,” என்றார் திரு டான்.

இத்திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், அது உணர்த்திய படிப்பினைகள் ஓர் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதனை https://aiverifyfoundation.sg/ai-assurance-pilot/ எனும் இணையப்பக்கம் வழியாகக் காணலாம்.

“ஜென்ஏஐ செயலிகளைச் சோதிப்பதற்கான தொடக்கத் தொகுப்பையும் (Starter Kit) மக்களின் கருத்துகளுக்காக இன்று வெளியாக்கியுள்ளோம்,” என்று திரு டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்