சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டு 4.1 விழுக்காடாகவும் 2026ஆம் ஆண்டு 2.3 விழுக்காடாகவும் பதிவாகும் என்று தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தக் கணிப்புகள், முன்னதாக முன்னுரைக்கப்பட்டதைவிட அதிகமாகும். ஏற்றுமதிகள், உற்பத்தி, நிதி, கட்டுமானம், ஒட்டுமொத்த விற்பனை, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் மேம்பட்ட முன்னுரைப்புகள் இடம்பெற்றிருப்பதைத் தொடர்ந்து பொருளியல் வளர்ச்சி குறித்த கணிப்புகள் கூடியுள்ளன.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 2.4 விழுக்காடும் அடுத்த ஆண்டு 1.9 விழுக்காடும் வளரும் என்று பொருளியல் வல்லுநர்கள் முதலில் கணித்திருந்தனர்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (எம்ஏஎஸ்) நிபுணத்துவ முன்னுரைப்பாளர்கள் காலாண்டுக்கு ஒருமுறை நடத்தும் கருத்தாய்வில் இந்தக் கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. கருத்தாய்வின் முடிவுகள் புதன்கிழமை (டிசம்பர் 17) வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பை வர்த்தக, தொழில் அமைச்சு, கடந்த நவம்பர் மாதம் அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த முன்னுரைப்புகள் கணிக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1.5லிருந்து 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கடந்த ஆகஸ்ட் மாதம் கணித்திருந்தது. இப்போது இவ்விகிதம் நான்கு விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், அடுத்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து ஒன்றிலிருந்து மூன்று விழுக்காட்டுக்கு இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
உலகப் பொருளியல் வளர்ச்சி தொடர்ந்து மீள்திறனுடன் இருந்து வர்த்தகப் பூசல்கள் தொடர்ந்து சீராகிவரும் வேளையில், செயற்கை நுண்ணறிவால் தொழில்நுட்பத் துறை கண்டுள்ள மேம்பாடு நீடித்தால் பொருளியல் வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் கருத்தாய்வில் பங்கேற்ற பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், வர்த்தகப் பூசல்கள் மறுபடியும் மோசமடைந்தாலோ அமெரிக்கப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை மறைந்துபோனாலோ சிங்கப்பூரின் பொருளியல் பாதிக்கப்படலாம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கப் பங்குச் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் மீதான நம்பிக்கை மறைந்துபோனால் அது, பொதுவாக நிதிச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலகப் பொருளியலைப் பாதிக்கக்கூடும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பகுதி மின்கடத்தி, மருந்து உள்ளிட்டவற்றுக்கு முதன்முறையாக வரி விதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விவகாரங்களைக் கொண்ட, நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதற்றநிலை சிங்கப்பூரின் பொருளியலுக்கு ஆக அதிக அச்சுறுத்தலை அளிக்கும் அம்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

