சிங்கப்பூரின் முதலாம் பசுமைத் தரவு நிலையம் திறப்பு

சிங்கப்பூரின் முதலாம் பசுமைத் தரவு நிலையம் திறப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 9:57 pm

2 mins read

சிங்கப்பூரில் கடுமையான பசுமை விதிமுறைகளின்கீழ் கட்டப்பட்ட முதல் தரவு நிலையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) திறக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் கணினி ஆற்றல் தேவைக்கும் நில, எரிசக்திக் கட்டுப்பாடுகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது.

அமெரிக்க நிறுவனமான ஈக்வினிக்ஸ், ஜாலான் துக்காங் பகுதியில் ‘எஸ்ஜி6’ எனும் தனது ஆறாவது நிலையத்தை அமைத்துள்ளது.

கிட்டத்தட்ட $370 மில்லியன் முதலீட்டில் நிறுவப்பட்ட இதில் ஒன்பது தளங்கள் உள்ளன. முழுமையாகக் கட்டமைக்கப்படும்போது கணினிச் சேவையகத்தை இயக்கத் தொடர்ந்து தேவைப்படும் 20 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும்.

புதிய நிலையங்களுக்கான தற்காலிகத் தடை 2022ல் நீக்கப்பட்ட பிறகு, தெரிவுசெய்யப்பட்ட நான்கு திட்டங்களில் இதுவும் ஒன்று. நிலைத்தன்மை, உத்திபூர்வ பங்களிப்பு, பொருளியல் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்கள் மதிப்பிடப்பட்டன.

அரசாங்கம் நிர்ணயித்த 1.3 வரம்பைவிடச் சிறந்த 1.2 எனும் மின்திறன் பயன்பாட்டு விகிதத்தை எட்டும் நோக்கில் இந்நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகத் திறன் கொண்ட குளிரூட்டிகளைப் பயன்படுத்தியும் சேவையகங்களை 27 டிகிரி செல்சியசில் இயக்கியும் மின்பயன்பாடு குறைக்கப்படுகிறது. மேலும், காற்றைவிட விரைவாக வெப்பத்தை அகற்றும் நவீன திரவக் குளிரூட்டும் முறையையும் இக்கட்டடம் ஆதரிக்கிறது.

இயற்கைவளம் குறைவாக இருந்தபோதிலும் அதிகச் செயல்திறன், கூடுதல் மின்னிலக்க நடவடிக்கைகளுக்கான இடத்தை உருவாக்க முடியும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார்.

“சிங்கப்பூரின் லட்சியம் அதிகபட்சக் கணினித் திறன் அன்று; மாறாகக் கணினித் திறனிலிருந்து கிடைக்கும் அதிகபட்ச மதிப்பே ஆகும்,“ என்றார் அவர்.

தென்கிழக்காசிய மின்னிலக்கக் கட்டமைப்பில் புதிய தரவு நிலையம் முக்கியப் பங்காற்றும் என்றும் திரு டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்