சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி மே மாதத்தில், எதிர்பார்க்கப்பட்டதைவிட மேம்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் அது 0.1 விழுக்காடு மட்டுமே குறைந்தது. ஒப்புநோக்க, ஏப்ரல் மாதத்தின் திருத்தப்பட்ட ஏற்றுமதி வீழ்ச்சி 9.6 விழுக்காடாக இருந்தது.
தொடர்ந்து நாலாவது மாதமாக மே மாதத்தில் ஏற்றுமதி குறைந்தாலும், கடந்த 20 மாதங்களில் பதிவான ஆக மிதமான வீழ்ச்சி அது என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஜூன் 18ஆம் தேதி தெரிவித்தது.
முன்னதாக ராய்ட்டர்ஸ் நிறுவனக் கருத்துக் கணிப்பில், மே மாத ஏற்றுமதி ஒரு விழுக்காடு குறையும் என்று ஆய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர். ஆனால் அதைவிடக் குறைவான வீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதியில், 22 மாதங்களில் முதல்முறையாக ஈரிலக்க வளர்ச்சி பதிவானது.
ஆண்டு அடிப்படையில் மே மாதம், மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 21.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது. ஏப்ரல் மாதத்தில் அந்த விகிதம் 3.3 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.
மே மாதம் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பகுதி மின்கடத்திகளின் ஏற்றுமதி அதிகரித்ததே காரணம். ஆண்டு அடிப்படையில் பகுதி மின்கடத்திகளின் ஏற்றுமதி 35.8 விழுக்காடு அதிகரித்து $1.9 பில்லியனாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
கணினி வட்டுகள், கணினிகள் ஆகியவையும் மின்னணுப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பங்களித்தன. கணினி வட்டுகளின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் 92 விழுக்காடு அதிகரித்து $571.5 மில்லியனாகப் பதிவான நிலையில், கணினிகளின் ஏற்றுமதி 27.2 விழுக்காடு அதிகரித்து $286.9 மில்லியனகாப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதிக் குறைவு சற்றே தணிந்து, சென்ற ஆண்டு (2023) மே மாதத்தைவிட இந்த ஆண்டு மே மாதத்தில் ஆறு விழுக்காடு சுருங்கியது. ஒப்புநோக்க, ஏப்ரலில் அது 12.6 விழுக்காடாக இருந்தது.
ஒட்டுமொத்தத்தில், சிங்கப்பூரின் ஏற்றுமதிப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள சந்தைகளுக்கான ஏற்றுமதி மே மாதம் அதிகரித்தது.
ஆண்டு அடிப்படையில், மொத்த வர்த்தகம் 14.2 விழுக்காடு வளர்ச்சிகண்டு $108.3 பில்லியனாகப் பதிவானது.

