ஜனவரியில் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 2.1% சுருங்கியது

2 mins read
0afcc9cb-6b08-4682-80bc-4dd2b87ebf7a
எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி ஜனவரி மாதம் 2.1 விழுக்காடு சுருங்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி ஜனவரி மாதம் 2.1 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அது முறையே 3.4 விழுக்காடும் 9 விழுக்காடும் வளர்ச்சி கண்டது.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 0.3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று புளூம்பெர்க் முன்னுரைத்திருந்தது.

காலத்துக்கேற்ப சரிசெய்யப்பட்ட பிறகு மாத அடிப்படையில், ஜனவரி மாதத்துக்கான ஏற்றுமதி 3.3 விழுக்காடு சரிந்தது. கடந்த டிசம்பர் மாதம் அது 1.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சிங்கப்பூரின் ஏற்றுமதி இந்த ஆண்டில் மீள்திறன் மிக்கதாக விளங்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜனவரி மாத வீழ்ச்சி தற்காலிகமானது என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர். சென்ற ஆண்டின் கடைசி மாதங்களில் பதிவான எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் சிறப்பான ஏற்றுமதி இந்த ஆண்டின் தொடக்கத்திலும் தொடரும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினர்.

அமெரிக்காவின் புதிய அதிபர் நிர்வாகத்தின்கீழ் வர்த்தக நிச்சயமற்றதன்மை அதிகரிக்கும் நிலையில் சிங்கப்பூரில் அது சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் பலர் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்காவின் வரி விதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு பருவத்தின் தொடக்கத்திலேயே பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ‘ஃப்ரண்ட் லோடிங்’ முறையில் ஏற்றுமதிகள் செய்யப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

உலகளாவிய வர்த்தகப் போர் மேலும் விரிவடைந்தால், சிங்கப்பூர் உள்ளிட்ட வர்த்தகம் சார்ந்த ஆசியப் பொருளியல்களுக்குக் கூடுதல் காலம் சவால்கள் நிலவும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

எண்ணெய் சாரா உள் நாட்டு உற்பத்திகளின் ஏற்றுமதி ஜனவரி மாதம் சுருங்கியதற்கு, மின்னணுப் பொருள்கள், மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது காரணம்.

ஹாங்காங், அமெரிக்கா, தைவான் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி சென்ற மாதம் வளர்ச்சி கண்டது. இருப்பினும் சீனா, இந்தோனீசியா, ஐரோப்பிய ஒன்றியம், தாய்லாந்து, மலேசியா ஆகியவற்றுக்கான ஏற்றுமதி குறைந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்