தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மே மாத முக்கிய ஏற்றுமதி 3.5% சரிந்தது

2 mins read
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 20.6% வீழ்ச்சி
a6025eba-5162-4f14-9f8c-94a451a09608
அமெரிக்க வரி விதிப்பு 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி மே மாதம் 8 விழுக்காடு உயருமென்று முன்னுரைக்கப்படிருந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி சென்ற மாதம் (மே 2025) வியக்கத்தக்க வகையில் சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி ஈரிலக்க வீழ்ச்சியைச் சந்தித்தது.

எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில், சென்ற மாதம் 3.5 விழுக்காடு குறைந்தது. ஒப்புநோக்க, ஏப்ரல் மாதம் அது 12.4 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி மே மாதம் வளர்ச்சியடைந்தபோதும் மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது.

முன்னதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஆய்வாளர்கள், சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி மே மாதம் 8 விழுக்காடு உயருமென்று முன்னுரைத்திருந்தனர்.

அமெரிக்க வரி விதிப்பு 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ஒரு பருவத்தின் தொடக்கத்திலேயே பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடைமுறையின்கீழ் (front loading), ஏற்றுமதி நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

2025ல் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி வளர்ச்சி 1 முதல் 3 விழுக்காடாக இருக்குமென்று முன்னுரைக்கப்பட்ட நிலையில், மே மாதத்தில் அது கிட்டத்தட்ட 1 விழுக்காடாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக என்டர்பிரைஸ்எஸ்ஜி தெரிவித்திருந்தது.

மே மாதத்தில் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தாலும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்கான சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 3.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 1.7 விழுக்காடு கூடியது. ஒப்பிடுகையில், ஏப்ரலில் அது 23.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

தனிப் பயன்பாட்டுக்கான கணினி ஏற்றுமதி 50.9 விழுக்காடு அதிகரித்தது. சில்லு ஏற்றுமதி 4.3 விழுக்காடு கூடியது. பயனாளர் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி 49 விழுக்காடு ஏற்றம் கண்டது.

இவ்வேளையில், மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி 5.3 விழுக்காடு சரிந்தது. ஒப்புநோக்க, ஏப்ரல் மாதம் அது 9.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.

சிங்கப்பூரின் ஏற்றுமதிப் பட்டியலில் முன்னணி வகிக்கும் 10 இடங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 20.6 விழுக்காடு வீழ்ந்தது. ஏப்ரலில் அது 1.2 விழுக்காடு அதிகரித்திருந்தது.

தாய்லாந்து, மலேசியா ஆகியவற்றுக்கான ஏற்றுமதிகள் முறையே 17 விழுக்காடும் 7.6 விழுக்காடும் சரிந்தன.

இருப்பினும், தைவான், இந்தோனீசியா, தென்கொரியா, ஹாங்காங் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி மே மாதம் அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்