சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், மத்திய கிழக்குப் பூசலுக்கு மத்தியிலும் கடந்த மே மாதம் வலுவாக இருந்தது.
ஆண்டு அடிப்படையில் மே மாதம் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 38.4 விழுக்காடு அதிகரித்தது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேவை தொடர்ந்து அதிகமாக இருந்துவருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.
முன்னதாக ஏப்ரல் மாதம் இந்த வளர்ச்சி விகிதம் 24.4 விழுக்காடாகப் பதிவானது.
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி 18.1 விழுக்காடு அதிகரித்தது. என்டர்பிரைஸ்எஸ்ஜி புதன்கிழமை (ஜூன் 17) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்தன.
முன்னதாக, மே மாத எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி 31.1 விழுக்காடு கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற வல்லுநர்கள் கணித்திருந்தனர்.
எண்ணெய் சாரா ஏற்றுமதிகளில் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் மே மாதம் 94.8 விழுக்காடு அதிகரித்தது. செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட தேவை அதிகமாக இருந்துவருவது அதற்கு முக்கியக் காரணம். ஏப்ரலில் இவ்விகிதம் 66.7 விழுக்காடாகப் பதிவானது.
மின்னணு சாராப் பொருள்களுக்கான ஏற்றுமதி 17.7 விழுக்காடு அதிகரித்தது. ஏப்ரல் மாதம் இப்பிரிவில் வளர்ச்சி விகிதம் 10.9 விழுக்காடாகப் பதிவானது.
மருந்துத்துறை, வர்த்தகப் பரிமாற்றத்துக்கு அல்லாத தங்கம் (non-monetary gold) உள்ளிட்டவற்றில் காணப்பட்ட வளர்ச்சி அதற்கு முக்கியக் காரணமாகும். ஓராண்டுகாலத்தில் இத்துறைகள் கணிசமான வளர்ச்சி கண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தைவான், அமெரிக்கா, சீனா ஆகிய சந்தைகளுக்கு எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் அதிகரித்தன. அதேவேளை, இந்தோனீசியாவுக்கான முக்கிய ஏற்றுமதிகள் குறைந்தன.
ஒட்டுமொத்த வர்த்தகம் மே மாதம் 39.7 விழுக்காடு அதிகரித்தது. ஏப்ரலில் ஒட்டுமொத்தமாக 33 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானதைத் தொடர்ந்து அந்தப் போக்கு தொடர்ந்தது.
மே மாதம் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டிலும் வளர்ச்சி பதிவானது.

