வேளாண் திட்டங்களுக்கு உதவும் சிங்கப்பூரின் புதிய முயற்சி

வேளாண் திட்டங்களுக்கு உதவும் சிங்கப்பூரின் புதிய முயற்சி

படம்: ‘காப்31’ சிங்கப்பூர் அரங்கம்

10 Nov 2026 - 9:45 pm

2 mins read

துருக்கியின் அந்தால்யாவில் நடைபெற்றுவரும் ‘காப்31’ ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாநாட்டில், சிங்கப்பூர் அரங்கில் ‘ஸ்பியர் ஆசியா’ என்ற புதிய திட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தொடங்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் மீள்திறனுக்கான திட்டப்பணி, முதலீடுகளை விரிவுபடுத்தும் திட்டம் என்பதன் சுருக்கமே ‘ஸ்பயர் ஆசியா’.

தென்கிழக்காசியாவில் பருவநிலை மாற்றத்தால் நெல் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகிறது. தீவிர எல் நினோ காலகட்டங்களில் அப்பகுதியில் சராசரி பயிர் உற்பத்தி 10 விழுக்காடு வரை குறையக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்நிலையில், வட்டாரத்தில் வேளாண் உணவுத் திட்டங்களுக்கான முதலீடுகளை ஊக்குவிக்க ‘ஸ்பியர் ஆசியா’ வழிவகுக்கிறது.

சிங்கப்பூரின் பருவநிலை நடவடிக்கைக்கான தூதர் ரவி மேனன் மாநாட்டில் இந்தப் புதிய முயற்சி பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

“அரசியல் முன்னுரிமைகள் மாறலாம், பொருளியல் சுழற்சிகள் மாறலாம்; ஆனால் இயற்கை விதி மாறாது,” என அவர் கூறினார். பருவநிலை மாற்றம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது, அது மேலும் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்துலக அளவில் பருவநிலை தொடர்பில் ஒன்றிணைந்து செயல்படுவது கடினமாகிவரும் சூழலில், புதிய நடைமுறைப் பங்காளித்துவங்கள் அவசியமாகின்றன எனத் திரு ரவி மேனன் குறிப்பிட்டார்.

‘ஸ்பியர் ஆசியா’ திட்டம் மூன்று முக்கியத் தூண்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, சிறு விவசாயிகளுக்கான புதிய தீர்வு நிலையங்கள் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறுவப்படும். இது முதலீட்டாளர்களுக்கான தரவு இடைவெளியைக் குறைக்க உதவும்.

இரண்டாவதாக, தகுதியான திட்டங்களை அடையாளம் கண்டு முதலீட்டுக்குத் தயார்படுத்த சந்தை மேம்பாட்டு வசதி உருவாக்கப்படும்.

மூன்றாவதாக, நிதி இடைவெளியை நிரப்ப 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கலப்பு நிதி திரட்டப்படும்.

வணிக அடிப்படையில் நிதி பெறத் தடுமாறும் வேளாண் நிறுவனங்களுக்கு அக்கலப்பு நிதி கைகொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய பருவநிலை மாற்றச் செயலகம், சிங்கப்பூர் நாணய ஆணையம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகிய மூன்று அரசாங்க அமைப்புகள் அத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்