தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் சிங்கப்பூரின் கரிமக் கழிவு வரி வருவாய் எதிர்பார்ப்பைவிடக் குறைவு

2 mins read
வரி விகிதம் ஐந்து மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது
038122c6-c7e2-4f01-b247-480da1c7d04e
சென்ற ஆண்டு (2024) கரிமக் கழிவு வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாய் $642 மில்லியனாக இருக்குமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024) கரிமக் கழிவு வரி ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில், அந்த வரியின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவாக இருக்குமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டுக்கான கரிமக் கழிவு வரி வருவாய் $642 மில்லியனாக முன்னுரைக்கப்பட்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை, கரிமக் கழிவு வரி ஒரு டன்னுக்கு $5ஆக இருந்தது. அப்போது அந்த வரி மூலம் ஆண்டுக்கு $200 மில்லியன் வருவாய் கிட்டியது.

சென்ற ஆண்டு, கரிமக் கழிவு வரி ஒரு டன்னுக்கு $25ஆக உயர்த்தப்பட்டது. 2024ல் கரிமக் கழிவு வெளியேற்றம் கடந்த ஆண்டுகளைப் போலவே இருந்ததாகக் கருதினால், அந்த வரி மூலம் ஏறக்குறைய $1 பில்லியன் வருவாய் கிட்டியிருக்கும்.

உலகச் சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கரிமக் கழிவு வரி வருவாய் குறைந்ததற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

போட்டித்தன்மையுடன் விளங்குவதற்கு உதவும் நோக்கில் அத்தகைய நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் ஏறக்குறைய 50 பெருநிறுவனங்கள் கரிமக் கழிவு வரி செலுத்த வேண்டியவை. அவை பெரும்பாலும் உற்பத்தி, மின்சாரம், கழிவு, தண்ணீர் ஆகிய துறைகளைச் சார்ந்தவை. நாட்டின் மொத்தக் கரிமக் கழிவு வெளியேற்றத்தில் ஏறத்தாழ 70 விழுக்காட்டுக்கு அவை காரணம்.

2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின் தேசிய அளவிலான மொத்தக் கரிமக் கழிவு ஆண்டுக்கு 53.87 மில்லியன் டன்னுக்கும் 58.59 மில்லியன் டன்னுக்கும் இடைப்பட்டிருந்தது. கரிமக் கழிவு வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாயும் நிலையாக இருந்தது (ஆண்டுக்குக் கிட்டத்தட்ட $200 மில்லியன்).

2024ஆம் ஆண்டுக்கான கரிமக் கழிவு வரி வருவாய் மதிப்பீடு, வரி விகித உயர்வை மட்டுமன்றி வேறு சில அம்சங்களையும் எடுத்துக்காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

வரி செலுத்த வேண்டிய நிறுவனங்கள் வெளியேற்றிய கரிமக் கழிவின் மதிப்பீடு, கரிமக் கழிவு வரியைக் குறைக்கும் வகையில் அனைத்துலகக் கரிமப் புள்ளிகளை அந்த நிறுவனங்கள் பயன்படுத்தியது, கடும் போட்டியை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் வரி உயர்வைச் சமாளிக்க வழங்கப்பட்ட இடைக்கால உதவித்தொகை ஆகியவற்றை அவர் சுட்டினார்.

வேதிப்பொருள்கள், மின்னணுவியல், உயிர்மருத்துவ உற்பத்தித் துறைகளைச் சார்ந்த பெருநிறுவனங்கள் பெரும்பாலும் அத்தகைய உதவித்தொகையைப் பெற்றன.

குறிப்புச் சொற்கள்