பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படுமெனச் சிங்கப்பூர் நம்புவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அது நடக்குமா என்பது கேள்வியன்று, எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி என்றும் டாக்டர் ஃபைஷால் கூறியிருக்கிறார்.
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பில் சிங்கப்பூர் பணியாற்றி வருவதாக நேற்று (செப்டம்பர் 21) அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு நீடித்த அமைதியை உறுதிசெய்ய வேண்டுமென்பதுதான் சிங்கப்பூரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என்றும் மத்தியக் கிழக்கு நிலவரம் குறித்த அமைச்சர்நிலை அறிக்கையை வாசித்தபோது இணைப் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தைச் சிங்கப்பூர் இன்னும் அங்கீகரிக்காதபோதும் காஸாவில் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கான மனிதநேய உதவியைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய அவர், தனிநாடாவதற்குப் பாலஸ்தீன ஆணையம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கான நடைமுறை ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.
இஸ்ரேல்-காஸா சண்டையால் இங்குள்ள மலாய் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் ஃபைஷால், அவர்களைப் பொறுத்தமட்டில் பாலஸ்தீனம் தனிநாடாவது அர்த்தமிகு நடவடிக்கை என்றும் சொன்னார்.
“ஆனாலும், மலாய் முஸ்லிம்கள் மட்டுமன்றி, நான் ஒட்டுமொத்தச் சிங்கப்பூரர்கள் சார்பில் பேசுவதாக நம்புகிறேன். மத்தியக் கிழக்கில் நடப்பவை இங்கு உள்ளவர்களிடம் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன,” என்றார் டாக்டர் ஃபைஷால்.
தொடர்புடைய செய்திகள்
“காஸாவில் நடப்பது அச்சந்தரும் மனிதநேயத் துயரம். நமது கருத்தியல்களும் நம்பிக்கைகளும் எவ்வாறாக இருந்தாலும், அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு, கட்டாய இடப்பெயர்வு, பறிபோகும் அப்பாவி மக்களின் உயிர்கள் ஆகியவை நம்மில் பலர்க்கும் தாங்கவொண்ணாத் துயரத்தை அளிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
“இஸ்ரேலின் நடவடிக்கைகள் நியாயப்படுத்த முடியாதவை. அவை அனைத்துலக மனிதநேயச் சட்டத்தை மீறியவையாகவும் இருக்கலாம். அவை உறுதியாக அறநெறிக்கு எதிரானவை,” என்று உள்துறை மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஃபைஷால் சாடினார்.
“பரந்த அனைத்துலகச் சமுதாயத்துடன் இணைந்து, அனைத்துலகச் சட்ட மீறல்களையும் இரு தனித்தனி நாடுகளுக்கான சாத்தியத்தை நிரந்தரமாக அழிக்கக் கோரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இம்மாதம் 12ஆம் தேதி ஐநா பொதுச் சபையில் எடுக்கப்பட்ட, இரு நாடுகள் தீர்வை வலியுறுத்தும் ‘நியூயார்க் அறிக்கை’யைச் சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டதைச் சுட்டிய அவர், இரு நாடுகள் தீர்வுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குச் சிங்கப்பூர் மீண்டும் உறுதியான ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்திற்கான மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாராளமாக நன்கொடை அளிக்க அனைத்து இன, சமயங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்களை அணிதிரட்டிய மலாய் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.