‘சிங்கப்பூர்-சீனா உறவு பிரகாசமாக உள்ளது’

‘சிங்கப்பூர்-சீனா உறவு பிரகாசமாக உள்ளது’

2 mins read
f3b568c8-1489-49c0-a95a-9d36073978ed
பெய்ஜிங்கில் உள்ள டயாயோயூடாய் விருந்தினர் மாளிகையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெய்ஜிங்: உலகம் அதிகம் கணிக்க முடியாத போராட்டக்களமாக விளங்குகிறது. இந்த நிலையில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகச் சிறப்பாக பிரகாசமாக உள்ளது என்று செப்டம்பர் 9ஆம் தேதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

பெய்ஜிங்கில் உள்ள டயாயோயூடாய் மாநில விருந்தினர் மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய திரு விவியன், 2023ல் உறவை மேம்படுத்திய நடவடிக்கை, நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தனித்துவமான, நீண்டகால மற்றும் மிக நெருக்கமான உறவுகளை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.

2025ல் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் அரசதந்திர உறவு ஏற்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் 2024 மே மாதத்தில் சிங்கப்பூர் தலைமைத்துவ மாற்றத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வாங் சுட்டிக்காட்டியதை திரு விவியன் ஒப்புக்கொண்டார்.

இருபது ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ சியன் லூங் அப்பொறுப்பிலிருந்து விலகிய பிறகு கடந்த மே 15ஆம் தேதி திரு லாரன்ஸ் வோங் பிரதமராக பொறுப்பு ஏற்றார்.

“பிரதமர் லாரன்ஸ் வோங் இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார். சீனாவுடன் உறவை ஆழமாக மேம்படுத்தும் வாழ்த்துகளை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்,” என்றார் அமைச்சர் விவியன்.

2023 ஏப்ரலில் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்தபோது எதிர்காலத்தை நோக்கிய இருதரப்பு பங்காளித்துவ உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்டது.

திரு விவியன் பாலகிருஷ்ணன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு பெங்ஜிங் சென்றுள்ளார். அவருடன் வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவு ஏற்பட்டு 35 ஆண்டுகள் ஆனதை 2025ஆம் ஆண்டில் கொண்டாடும் நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவது உள்ளிட்டவை சிங்கப்பூர் பேராளர்களின் பெய்ஜிங் பயணத்தின் நோக்கமாகும்.

திரு விவியன் கடைசியாக 2023 பிப்ரவரியில் பெய்ஜிங் சென்றார்.

2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் நடைபெறும் வருடாந்திர இரு தரப்பு ஒத்துழைப்பு கூட்டத்தில் இணைத் தலைவராக சீனாவின் நிர்வாக உதவி பிரதமர் டிங் ஸியூஸியாங் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் செப்டம்பர் 9ஆம் தேதி சந்திப்பில் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக தொடக்கவுரையாற்றிய சீன அமைச்சர் வாங், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை ‘பழைய நண்பர்’ என்று குறிப்பிட்டு வரவேற்றார்.

தற்போதைய நிலையில்லாத உலகில் நமது வட்டாரம் நிலையில்லாத சில அம்சங்களை எதிர்நோக்குகிறது என்று திரு வாங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்