சிங்கப்பூரின் இரண்டாம் வர்த்தக மையம்: ஜூரோங்கில் நில ஒதுக்கீட்டுத் திட்டம்

சிங்கப்பூரின் இரண்டாம் வர்த்தக மையம்: ஜூரோங்கில் நில ஒதுக்கீட்டுத் திட்டம்

2 mins read
89f1408c-5d02-4278-8bf4-666ac34d378c
ஜூரோங் வட்டார ரயில் நிலையங்கள் 2028ஆம் ஆண்டின் மத்தியில் படிப்படியாகச் செயல்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் இரண்டாம் வர்த்தக மையத்தின் மேம்பாட்டுக்கான நில ஒதுக்கீட்டுத் திட்டம் திங்கட்கிழமை (மார்ச் 16) வெளியிடப்பட்டது.

ஜூரோங்கில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று நிலத் தொகுப்புகளில் ஜூரோங் லேக் டிஸ்டிரிக்ட் (JLD) வட்டாரத்தின் முதல் நிலப்பரப்பு, மேம்பாட்டாளர்களுக்கு பல கவர்ச்சியான வாய்ப்புகளை வழங்கும் விதமாக பெரிய அளவில் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உள்கட்டமைப்புப் பணிகளில் சிலவற்றை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். பயன்பாட்டுக்கு இல்லாமல் போகவுள்ள சாலைகள் உள்பட தற்போதுள்ள அரசாங்க நிலத்தில் உள்ளவற்றை அகற்றி, குறுக்குத் தீவு ரயில் பாதை (CRL), எம்ஆர்டி நிலையத்துக்குச் செல்ல சுரங்கப் பாதை இணைப்பு அமைத்தல் போன்ற வேலைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

தனியார் வீடுகள் அமைக்க அதிக நிலம் ஒதுக்கப்பட்டு அலுவலகத்துக்கான இடம் குறைக்கப்பட்டுள்ளது. இது நில மேம்பாட்டாளர்கள் திட்டம் வகுத்தலுக்கு வசதியாக அமையும்.

நிலப்பரப்பு மொத்தம் 186,139 சதுரமீட்டர் அளவாகும். அதில் குறைந்தபட்சம் 40,000 சதுரமீட்டர் அலுவலகத்துக்கும் 1,200 சதுரமீட்டர் தனியார் வீடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவற்றோடு, 44,000 சதுரமீட்டர் அளவு நிலத்தை சில்லறை விற்பனை, ஹோட்டல், விளையாட்டுத் தளங்கள், மருத்துவச் சேவைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் எனப் பலவற்றுக்கு பயன்படுத்தலாம்.

2026ஆம் ஆண்டின் முதல்பாதிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாங்க நில விற்பனை திட்டத்தின் (GLS) அடிப்படையில் நகர மறுசீரமைப்பு ஆணையம் (URA) ஜூரோங்கில் உள்ள டவுன் ஹால் லிங்க் பகுதியின் நிலத்தை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

மறுசீரமைக்கப்பட்டுள்ள திட்டத்தை நில மேம்பாட்டாளர்கள், ஒப்பந்ததாரர் அல்லது குத்தகையாளர்கள் ஆராய்ந்து திட்டமிட அதிக கால அவகாசத்தை இந்த ஏற்பாடு வழங்கும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.

நிலச் சந்தை வர்த்தகம் காட்டும் ஆர்வத்தையும், மேம்பாட்டாளர்கள் வழங்கும் தொகை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைவதையும் பொறுத்தே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

அலுவலகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், குடியிருப்புகள், உணவகங்கள், சமூக நடவடிக்கைகள் என பல வர்த்தகப் பயன்பாடுகள் ஒருங்கிணைந்து விளங்குவது நகரின் மத்திய வர்த்தக வட்டாரமாகும்.

அதற்கு ஈடாக மாற்று வர்த்தக மையத்தை அமைக்கும் அரசாங்கத் திட்டத்தில் ஜூரோங் லேக் டிஸ்டிரிக்ட் வட்டாரம் முன்னோடியாகத் திகழும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டில் ஜூரோங் லேக் வட்டாரப் பெருந்திட்டத்துக்கு ஐந்து உள்ளூர் மேம்பாட்டாளர்கள் கூட்டாக நிர்ணயித்த $2.5 பில்லியன் ஏலத் தொகை மிகக் குறைவு என்ற காரணத்தால் அரசாங்கம் அதனை நிராகரித்தது.

ஜூரோங் பகுதியில் அரசாங்கம் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. ஜூரோங் ஏரி தோட்டம் மறுவடிவமைப்பு, ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில்பாதை என இரண்டு புதிய எம்ஆர்டி சேவைகள் அதில் அடங்கும்.

புதிய எம்ஆர்டி திட்டங்கள் நிறைவடைந்ததும், ஜூரோங் லேக் பகுதியிலிருந்து குறிப்பாக சாங்கி விமான நிலைய முனையம் ஐந்து உள்பட தீவின் அனைத்து பகுதிகளுக்கும் ரயிலில் பயணம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்