அறிவார்ந்த தேசத்திற்கான இலக்கிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மற்றுமொரு புதிய திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பச் சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் (‘டிசிஎஸ்’) சிங்கப்பூரில் தன் உயர் ஆற்றல்மிக்க ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிலையத்தை நிறுவியுள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளுக்கு ஆசியா-பசிஃபிக் வட்டாரத்தின் முன்னணி மையமாகத் திகழும் சிங்கப்பூருக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் ‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் புதிய நிலையம் அமைந்துள்ளது.
சாங்கி தொழிற்பூங்காவில் வர்த்தக வளாகத்திலுள்ள நிலையத்தின் திறப்பு விழாவை தேசிய வளர்ச்சி, வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் ஆல்வின் டான் வியாழக்கிழமை (ஜூலை 3) கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்தத் திட்டம்மூலம் ஏறத்தாழ 60 சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கும் வேறு சில புதிய நிறுவனங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளங்களும் வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன.
புதிய நிறுவனத்திலிருந்து பெறப்படும் வாய்ப்புகள் வழியாக வர்த்தக உலகில் காணப்படும் சவால்களுக்குச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேம்பட்ட தீர்வுகளைத் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து மேற்கூறிய சிறிய நடுத்தர நிறுவனங்கள் பெற்றிட முடியும்.
தொடக்க விழாவில் உரையாற்றிய திரு டான், சிங்கப்பூரில் அதன் 40வது ஆண்டு விழாவை கொண்டாடும் ‘டிசிஎஸ்’ நிறுவனத்துக்கு வாழ்த்துகளைக் கூறினார்.
இந்தியாவும் சிங்கப்பூரும் அதன் 60வது அரசதந்தர உறவுகளைக் கொண்டாடும் வேளையில், அறிவார்ந்த பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய தொழில்துறைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பங்காளித்துவத்தைப் பற்றி அவர் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“நமது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அதிகளவில் இணைந்து வருவதால், பொறுப்புடன் அதனை மேம்படுத்துதல், கையாளுதல் மிகவும் முக்கியம்,” என்பதை திரு டான் வலியுறுத்தினார்.
உள்ளூர் மற்றும் அனைத்துலக கூட்டாண்மை பங்காளிகளுடன் இணைந்து அறிவார்ந்த மறுமலர்ச்சியில் பேருதவி புரியும் என்றும் திரு டான் நம்பிக்கை தெரிவித்தார் .
இந்த நிலையத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க, தரவு சார்ந்த அறிவியல், இணையப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பணியாற்ற உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பயின்ற ஏறத்தாழ 50 பட்டதாரிகளை அமர்த்தவும் ‘டிசிஎஸ்’ திட்டமிடுகிறது.
சிங்கப்பூர் அறிவார்ந்த தேசம் நோக்கிய அதன் பயணத்தைக் கடந்துவரும் இவ்வேளையில் ‘டிசிஎஸ்’ நிறுவனத்துடன் இதுபோன்ற மேலும் பயனுள்ள ஒருங்கிணைப்பை நாடுவதாகவும் திரு டான் கூறினார்.
சிங்கப்பூரில் 6,600 ஊழியர்கள் தற்போது இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். நிலைய திறப்பு குறித்து தமிழ் முரசிடம் பேசிய ‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் சந்தை வளர்ச்சி பிரிவுக்கான தலைவர் திரு கிரிஷ் ராமசந்திரன், “தொழில்நுட்பம், நிதி, புத்தாக்கம் ஆகியவற்றில் முன்னணி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. எனவே, ‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிலையம் நிறுவுவதற்கான உகந்த இடமாகச் சிங்கப்பூரை முன்னிறுத்துகிறது,” என்றார்.

