பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் சமூக தொண்டூழியர்களின் நற்செயல், மற்றும் மதிப்புமிகு பங்களிப்புகளை அங்கீகரிப்பது மகிழ்ச்சி; சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாகக் காத்திட அவர்கள் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது என்று கூறினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.
செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற சமூகத் தொண்டூழியர்களுக்கான உள்துறை அமைச்சின் 18வது விருந்து உபசரிப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒட்டுமொத்த சமூக நடவடிக்கைகளில் நீடித்த வெற்றிகரமான பங்களிப்பை அளித்து வரும் சமூகத் தொண்டூழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், 2015லிருந்து சுய தீவிரவாதப் போக்குடைய சுமார் 40 சிங்கப்பூரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிய தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, அவர்களில் 13 பேர், 20 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள்,” என்றும் நினைவுகூர்ந்தார்.
இதன் தொடர்பில் மாறிவரும் அச்சுறுத்தலின் சூழலுக்கேற்ப தேசத்தின் நடவடிக்கைகளும் மாறுவது அவசியம் என்று வலியுறுத்தினார் அவர்.
பல்வேறு நாடுகளுக்குத் தாம் இதுவரை மேற்கொண்ட பயணங்களைக் குறிப்பிட்டுப் பேசினார் திரு டியோ.
“அநேக இடங்களில் சமூகம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான பங்காளித்துவ உறவு முறை இருப்பதில்லை. ஒன்று, அவர்களின் சட்டம் அவர்களைத் தடுக்கும்; அல்லது சமூகம் அரசுடன் இணைந்து செயலாற்றுவதை விரும்பாது. இதனால் அத்தகைய நாடுகள் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளும்.
“எனினும் தீவிரவாதத்திற்கு எதிராகப் போரிடும் நம் சமூகத்தின் முழுமையான அணுகுமுறை ஆற்றல் வாய்ந்தது, தனித்துவமானது,” என்று குறிப்பிட்டார் அவர்.
“சிங்கப்பூரில் சமூகத்திலிருந்து கிடைக்கும் வலுவான ஆதரவு பிரச்சினையின் அடிப்படையைக் கண்டறிந்து சமாளிக்க நம்மை அனுமதிக்கிறது. பயங்கரவாத தத்துவத்திலிருந்து பரந்து விரிந்த சமுதாயத்தைப் பாதுகாப்பது துவங்கி சுய தீவிரவாதப் போக்கில் இருக்கும் நபர்களைக் கண்டறிவது, அத்தகைய நபர்கள் மற்றும் அவர் குடும்பத்தினருக்காக மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு தொடர்பிலான ஆதரவு வழங்குவது வரை ஒவ்வொரு படியிலும் நாம் அதனைச் செய்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் பங்காளித்துவம் ஒன்றுபட்டுச் செயலாற்றுவது தொடர்ந்திட வேண்டும்,” என்றும் திரு டியோ கேட்டுக்கொண்டார்.
திரு டியோ, தமது உரையின்போது, காஸாவில் நடைபெற்று வரும் போர், பூசல், பயங்கரவாதம் ஆகியவையால் கலக்கமுற்றிருக்கும் உலகளாவிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டார்.
“தற்போதைய உலகச் சூழலில் நாமும் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறோம். சிங்கப்பூரர்கள் காஸாவில் தற்போது நிலவிவரும் சூழலுக்குக் கனிவுடனும் உதவி மனப்பான்மையுடனும் எதிர்கொண்டு வருகின்றனர். மானுட அல்லல்களை களைய நம்மால் இயன்றவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கூறிய நிகழ்வின்போது, சுய தீவிரவாதப் போக்குடைய நபர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கு சமூக மறுவாழ்வு, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைதல் ஆகியவற்றை ஊக்கமுடன் வழங்கி வரும் அமைப்புகளுக்கு இடையிலான பின்னலச் சேவைக் குழு (The Inter-Agency Aftercare Group (AGC) மற்றும் சமய மறுவாழ்வுக் குழுவின் பங்களிப்புகளைப் பாராட்டிப் பேசினார் திரு டியோ.
“தனிமையாக இருப்பதாக உணர்வது, மற்றும் ஒருவர் சார்ந்த சமூகத்திலிருந்து விலகியிருத்தல் ஆகியவையே பெரும்பாலான நேரங்களில் சுயாதீவிரவாத போக்கின் அடிப்படையாக இருக்கிறது. இதன் தொடர்பில் ஆதரவு தரும் மேற்கூறிய குழுக்கள், பாதிப்புகளுக்கு உள்ளான நபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு புதிய வாழ்க்கை அத்தியாயத்தைப் பேராதரவுடன் தருகின்றன,” என்றார் திரு டியோ.
நிகழ்வின்போது, அமைப்புகளுக்கு இடையிலான பின்னலச் சேவைக் குழு அதன் இருபதாவது ஆண்டு விழாவினை முன்னிட்டு “செர்விங் வித் ஏ ஹார்ட், செக்கியூரிங் தி நேஷன்’ எனும் தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டது.
சமூகத் தொண்டூழியர்களை அங்கீகரிப்பது நிறைவானது என்று தமிழ் முரசிடம் கூறிய சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “சிங்கப்பூரின் முக்கியமான வளம், மக்கள் வளம். அந்த மக்கள் வளம் பிரிந்துபோகாமல் நாம் ஒன்றிணைந்து, வெவ்வேறு இனத்தவராக சமயத்தினராக இருந்தாலும் அடிப்படையில் நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள் எனும் அடையாளத்தை ஒற்றுமையாகக் கட்டிக்காப்பதே நம் கடமையும் கடப்பாடுமாக இருக்க வேண்டும்,” என்றார்.