சிங்கப்பூர் என்ற சொல்லுக்கான அடையாளம், சீனாவுக்கும் அதற்கும் உள்ள கலாசார, வர்த்தக, தனிப்பட்ட தொடர்புகள் ஆகியவை இரு நாடுகளும் ஒன்றாகச் செயல்பட்டு ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள வழி வகுத்துள்ளது.
அதேவேளை, சிங்கப்பூரின் சொந்த அனுபவங்களும் அந்த உறவுக்குக் கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது. இதை நாம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) கூறினார். குறிப்பாக சவாலான இந்தக் காலகட்டத்துக்கு இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரு லீ, சிங்கப்பூரர்களிடம் அவ்வாறு சொன்னார். அவர், சீனாவுக்கு மேற்கொண்ட ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் நிறைவடையவிருக்கும் வேளையில் அவர் பேசினார்.
சிங்கப்பூர்-சீனாவின் கூட்டு முயற்சியான சூச்சோ தொழில்துறைப் வட்டாரத்தின் (Suzhou Industrial Park) 30ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்க திரு லீ சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களையும் சீன தொழில்நுட்ப நிறுவனங்களையும் சந்தித்தார்.
ஷாங்காயில் உள்ள மாண்டரின் ஓரியென்டல் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சீனாவில் வாழும் கிட்டத்தட்ட 450 சிங்கப்பூரர்களிடம் பேசிய திரு லீ, “சிங்கப்பூர் என்ற சொல்லுக்கு சீனாவில் அதிக மதிப்பு உள்ளது. மக்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும், அவர்கள் நம்மை ரசிக்கின்றனர். நம்மை மேலும் நன்கு புரிந்துகொண்டு நம்முடன் மேலும் ஒன்றுசேர்ந்து செயல்பட விரும்புகின்றனர்.
“என்னைப் பொறுத்தவரை அது மிகவும் முக்கியமானது,” என்றார் திரு லீ. சீனாவில் வேலை செய்யும், படிக்கும் சிங்கப்பூரர்கள்தான் அதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 25) தொடங்கிய திரு லீயின் சீனப் பயணம் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

