இம்மாதத்திலிருந்து எல்லா வட்டாரங்களிலும் உள்ள தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) ஈரறை ஃபிளெக்சி வீடுகளை ஒற்றையர் வாங்கலாம்.
இம்மாதம் நடைபெறவுள்ள பிடிஓ விற்பனை நடவடிக்கையிலிருந்து அத்தகையோர் ஈரறை ஃபிளெக்சி வீடுகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என்று வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு விடப்படவுள்ள 15 பிடிஓ வீட்டுத் திட்டங்களில் 10ல், 1,900களுக்கும் அதிகமான அத்தகைய வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று வீவக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பிடிஓ வீட்டுத் திட்டங்கள் அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், ஜூரோங் வெஸ்ட், காலாங்/வாம்போ, பாசிர் ரிஸ், செங்காங் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
முன்னதாக, முதன்முறையாக வீடு வாங்கும் 35 வயதைத் தாண்டிய ஒற்றையர் முதிர்ச்சியடையாத 12 வட்டாரங்களில் மட்டுமே புதிய ஃபிளெக்சி வீடுகளை வாங்க முடிந்தது. சுவா சூ காங், ஜுரோங் ஈஸ்ட், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட வட்டாரங்கள் அவற்றில் சில. அதன்படி பிடோக், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன் போன்ற முதிர்ச்சியடைந்த வட்டாரங்களில் அவர்களால் புதிய வீடுகள் வாங்க முடியாதிருந்தது.
இம்மாதம் நடைபெறவுள்ள விற்பனை நடவடிக்கை முதல் விற்கப்படும் வீடுகள் பிரைம், பிளஸ், ஸ்டான்டர்ட் (Prime, Plus, Standard) எனும் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்படும்.
குடியிருப்பு வட்டாரங்களை முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாதவை என்று வகைப்படுத்தும் தற்போது நடப்பில் இருக்கும் முறைக்குப் பதிலாக புதிய முறை பின்பற்றப்படும் என்று வீவக தெரிவித்துள்ளது. அதற்குத் தகுதிபெற ஒற்றையரின் வருமானம் 7,000 வெள்ளிக்கு அதிகமாக இருக்கக்கூடாது.
புதிய கட்டமைப்பின்கீழ் தகுதிபெறும் ஒற்றையர் ஈரறை பிரைம் ரக மறுவிற்பனை வீடு அல்லது ஸ்டான்டர்ட், பிளஸ் ரக வீட்டை வாங்கலாம். எல்லா பரப்பளவைக் கொண்ட அத்தகைய வீடுகளுக்கும் இது பொருந்தும். ஆனால், மூன்று தலைமுறை வீடுகளுக்கு அது பொருந்தாது.
முக்கிய இடங்களுக்கான அரசாங்க வீடமைப்புக் கட்டமைப்பின்கீழ் (Prime location housing model) விற்கப்பட்ட ஈரறை மறுவிற்பனை வீடுகளையும் ஒற்றையர் வாங்கலாம். அந்தக் கட்டமைப்பு 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.