வீவக, தனியார் வீடுகளில் நேரடி அஞ்சலகச் சேவை அறிமுகம்: சிங்போஸ்ட்

வீவக, தனியார் வீடுகளில் நேரடி அஞ்சலகச் சேவை அறிமுகம்: சிங்போஸ்ட்

2 mins read
ஏற்கெனவே உள்ள அஞ்சல பெட்டிகள் அகற்றப்படாது செயல்பாட்டில் இருக்கும்
3f7adae9-6c9f-46b9-a60b-dcd3896e89be
தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள ஓர் அஞ்சல்பெட்டி - படம்: தி நியூ பேப்பர்

மனிதவளத்தைச் சார்ந்து செயல்படுவதை குறைக்கும் இலக்குடன், சிங்போஸ்ட் நிறுவனம் தெம்பனிஸ் வட்டாரத்தில் இயங்கும் அதன் மின்வர்த்தகத் தளவாட மையத்தில் நவீன செயல்பாட்டை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அதிகாரபூர்வமாக தொடங்கிவைத்தது.

பொட்டலங்களை (பார்சல்) முறைப்படுத்தி வகுக்கும் தானியக்க வசதி $30 மில்லியன் செலவில் அங்கு நிறுவப்படுகிறது. அந்த வளாகத்தின் ஒரு மாடியில் இயங்கும் அந்த வசதி, இதற்கு முன்னதாக பாய லேபாரிலும் தெம்பனிசிலும் செயல்பட்ட இருவேறு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படும்.

சிங்போஸ்ட் சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் அங்கமாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும் தனியார் கூட்டுரிமை வீடுகளிலும் (கன்டொமினியம்) நேரடி அஞ்சல் சேவைகள் இவ்வாண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி முதல் சோதனை முறையில் மூன்று கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் அன்றையதினம் சிங்போஸ்ட் தெரிவித்தது.

வீடுகளின் கீழ்தளங்களில் அமைக்கப்படும் இதற்கென வடிவமைக்கப்பட்டப் பெட்டிகளில் அஞ்சல்கள், சிறு பொட்டலங்கள் போன்றவற்றை உள்ளூரில் வேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைக்கலாம். பெட்டிகளுக்குள் நுழையும் அளவிலான அஞ்சல்களும் பொட்டலங்களும் காலை 10 மணிக்குள் போடப்பட்டால், மறுநாள் அவை சேரவேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

‘சிங்போஸ்ட் அட் மை புளோக்’ (SingPost@MyBlock) திட்டத்துக்கான சோதனைகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நிறைவடைந்து தீவு முழுவதும் சேவை இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறத்தாழ 20,000 அஞ்சல் கூடுகள் இதற்கென அமைக்கப்படும் என்று சிங்போஸ்ட் நிறுவன செயல்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் கோ சீ ஹியோங் தெரிவித்தார்.

முதல் கட்டம் (ஜூலை 31)

ஜாலான் பெசார், ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங், மரின்-பரேட் பிரேடல் ஹைட்ஸ், பொங்கோல், தஞ்சோங் பகார் ஆகிய வட்டாரங்களில் முதல் கட்டமாக அஞ்சல் பெட்டிகள் அமைக்கப்பட்டு, ஜூலை 31ஆம் தேதி முதல் அவை பயன்பாட்டுக்கு வரும்.

இரண்டாம் கட்டம் (ஆகஸ்ட் 31)

இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 31 முதல் அல்ஜூனிட்-ஹவ்காங், அங் மோ கியோ, சுவா சூ காங், ஈஸ்ட் கோஸ்ட், ஜூரோங்-கிளமெண்டி- புக்கிட் பாத்தோக், மார்சிலிங்-யூடீ ஆகிய வட்டாரங்களில் சேவை தொடங்கும்.

மூன்றாம் கட்டம் (செப்டம்பர் 30)

இறுதியாக மூன்றாம் கட்டமாக பீஷான்-தோ பாயோ, ஜாலான் காயு, நீசூன், பாசிர் ரிஸ் சாங்கி, செம்பவாங், செங்காங், தெம்பனிஸ், வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் ஆகிய குடியிருப்பு வட்டாரங்களில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நேரடி அஞ்சலகச் சேவைகள் நடப்புக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்