தீவு விரைவுச்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) ஆறு வாகனங்களுக்கிடையே ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நான்கு கார்கள், இரு மோட்டார் சைக்கிள்கள் ஈடுபட்ட விபத்து குறித்து அன்றைய தினம் மாலை ஐந்து மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையின் யூனோஸ் லிங்க் நுழைவாயிலுக்கு முன்பகுதியில் விபத்து நேர்ந்தது.
மோட்டார் சைக்கிளோட்டிகள் இருவர், மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர் ஒருவர், காரில் ஓட்டுநருடன் பயணம் செய்த பெண் ஒருவர் ஆகியோர் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அப்போது அவர்கள் நினைவுடன் இருந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. காயமடைந்தோர் 27லிருந்து 69 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சம்பவக் காட்சிகள் பதிவான காணொளி ரோட்ஸ்.எஸ்ஜி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. குறைந்தது ஐந்து விரைவுச்சாலைக் கண்காணிப்பு ஆலோசனைக் கட்டமைப்பு வாகனங்கள் அந்தக் காணொளியில் காணப்பட்டன. தீவு விரைவுச்சாலையின் ஆக வலப்பக்கம் உள்ள சாலைத் தடத்தில் ஊழியர்கள் பலர் இருந்ததும் தெரிந்தது. காவல்துறை கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் காணப்பட்டன.
அப்புறப்படுத்தவேண்டிய இரு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் காணொளியில் தெரிந்தன. வாகன ஓட்டுநர்கள் யாரும் அதில் தென்படவில்லை.