சமய விழாக்கள் ஏராளமாக நடைபெற்ற வரலாற்றுக் காலகட்டத்தில் சமயச் சார்பற்ற சமூக நிகழ்ச்சி ஒன்று எல்லாத் தமிழர்களுக்கும் தேவை என்ற நோக்கில் தமிழர் திருநாள் உருவானது.
சிங்கப்பூரின் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் 1952 ஜனவரி 13ஆம் தேதி தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் முதன்முறையாக நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியில் இசைக்கச்சேரியும் மேடைப்பேச்சும் இருந்தன. அதற்கான முதல் விளம்பரத்தில் மாணவ மாணவிகளுக்குத் தின்பண்டங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
‘தமிழினம் பண்பாடு பெற்றதோர் தனியினம்’ என்ற வரியுடன் தொடங்கிய தமிழர் திருவிழா விருத்தம் ஒன்றையும் அன்றைய நாள் தமிழ் முரசின் முதற்பக்கம் தாங்கியிருந்தது. அந்நிகழ்ச்சியில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக மறுநாள் வெளிவந்த ‘தமிழர் திருநாள் பெருமித வெற்றி’ என்ற செய்திக் கட்டுரை அறிவித்தது.
இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்துக்கள் என்ற வேறுபாடுகளையெல்லாம் மறந்து ‘நாம் அனைவரும் தமிழர்கள்’ என்ற மனப்பான்மையுடன் எல்லாரும் கூடினர்.
இந்த வீறுநடை சில ஆண்டுகளுக்கே என்றாலும் அதன் இனிய நினைவுகளை அன்று இளையர்களாக இருந்தவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காண்பதில் திரு கோ சாரங்கபாணி ஆசை கொண்டதாகக் கூறிய திரு எஸ். ஏ நாதன், சொற்பொழிவு, பேச்சுப்போட்டி, நாடகப்போட்டி ஆகிய மொழிசார்ந்த நடவடிக்கைகளுடன் விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்ததாகக் குறிப்பிட்டார்.
பிற்காலத்தில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த தமிழ் இளையர்கள் பலருக்கு இந்த நிகழ்ச்சி தாவுத்தளமாக இருந்ததையும் 79 வயது திரு நாதன் சுட்டினார்.
“நல்ல சிந்தனையும் செயல்திறனும் உள்ளோரைத் திரு சாரங்கபாணியால் திரட்ட முடிந்தது. அன்றைய தமிழர் பிரதிநிதித்துவச் சபையில் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமைப்புகளில் 90 விழுக்காடு அவருக்கு ஆதரவாக இருந்தன. தலைமைத்துவப் பண்பு நிறைந்த அவரது ஆளுமையே அதற்குக் காரணம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சில ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தப்பட்ட தமிழர் திருநாள் படிப்படியாகத் தேய்ந்துபோனது. “நம் சமூகத்தில் மெல்லத் தலைதூக்கிய போட்டி பொறாமைகளே அதற்குக் காரணம் என்பேன். தமிழர்களை ஒன்றுபடுத்திய அதுபோன்றதொரு நிகழ்ச்சியை இன்றுவரையிலும் நான் பார்க்கவில்லை,” என்றார் திரு நாதன்.
தமிழர் திருநாளில் பங்கேற்று பின் தேசிய அளவில் சாதனை புரிந்தோரில் ஒலிம்பிக் ஜூடோ வீரர் கே.எஸ். மூர்த்தி, நெடுந்தொலைவோட்ட வி.சி சுப்பையா, தேசிய காற்பந்து வீரர் எஸ். ராஜகோபால், உடற்கட்டு வீரர் எஸ்.கே ராமச்சந்திரன், ஃபிபா காற்பந்து நடுவர் எஸ் சுப்பையா உள்ளிட்டோர் அடங்குவர்.
தேசிய அளவிலான உடற்கட்டு வீரரும் பயிற்றுவிப்பாளருமான 63 வயது எம் லெட்சுமணன், பல்வேறு போட்டிகளில் பங்களிக்கும் வாய்ப்பைத் தமிழர் திருநாள் தந்ததாகக் குறிப்பிட்டார்.
“என்னைப்போல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட தமிழ் இளையர்கள் எங்களுக்கு உற்ற நண்பர்கள் ஆனார்கள். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்கள் அவை,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அதே போல, தமிழர் திருநாள் நிகழ்ச்சியின் போது ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப்பந்தயம் ஒன்று தாம் தொடக்கத்தில் பங்கேற்ற போட்டி என்று முன்னாள் தேசிய திடல்தட வீராங்கனை கந்தசாமி ஜெயமணி, 70, தெரிவித்தார்.
பெண்களுக்கு ஊக்கம் தந்து அவர்களையும் ஈடுபடுத்திய பெருமை தமிழர் திருநாளுக்கு இருந்ததாகத் திருவாட்டி ஜெயமணி கூறினார்.
தமிழர் திருநாளுக்காகத் தயக்கமின்றி பல்வேறு விளையாட்டுகளை ஆடிப்பார்த்து மகிழ்ந்ததாக முன்னாள் தேசிய ஹாக்கி விளையாட்டாளரும் பயிற்றுவிப்பாளருமான மெளனகுரு நித்தியானந்தன் கூறினார்.
“திரு சாரங்கபாணியின் மகன் பலராம் என்னுடன் தேசிய அணியில் ஹாக்கி விளையாடினார். திரு கோ.சா. அரும்பும் திறனாளர்களை அரவணைப்பவர்; எப்போது தாமே முன்வந்து மக்களைச் சந்தித்துக் கைகுலுப்பவராக இருப்பார்; பிறர் தம்மை அணுகவேண்டும் என எதிர்பார்ப்பவர் அல்லர்; எல்லாரிடமும் பேசுவார்,” என்று திரு நித்தியானந்தன் புகழ்ந்தார்.