சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை; தகுந்த வேலையைக் கண்டறிவதற்கான வாய்ப்புகளுக்குத்தான் பஞ்சம் என்று துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் முயற்சியாக, சனிக்கிழமை (ஜூலை 19) காலை தொடங்கிய தென்கிழக்கு வட்டாரத்தின் திறன், கற்றல் விழாவில் குடியிருப்பாளர்கள் ஏறத்தாழ 2000 பேர் கலந்துகொண்டனர்.
தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்த விழாவில், மனிதவளம், கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவருடன் சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்வும் விழாவில் கலந்துகொண்டார்.
பிடோக் பேருந்து சந்திப்பு நிலையத்திற்கு அருகே, புளோக் 208Cஇன் கீழ்த்தளத்தில் ஜேம்ஸ் குக் கல்விக்கழகம், என்டியுசி கற்றல் நடுவம், தெம்புசு நிலையம் போன்ற அமைப்புகள் முகப்புகளை அமைத்ததிருந்தன.
என்சிஎஸ் தனியார் நிறுவனம், ‘டபிள்யுஎஸ்எச்’ எக்ஸ்பர்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே நேர்காணல்களை நடத்தி, கிட்டத்தட்ட 500 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
மக்களுக்குத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, வேலைவாய்ப்பு பெறுவதற்கும் நீண்டகாலத் தொழில் மீள்தன்மையை உருவாக்குவதற்கும் குடியிருப்பாளர்களுக்குப் பாதை அமைத்துக் கொடுப்பது இவ்விழாவின் நோக்கம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவின் ஓர் அங்கமாக ஜூலை 19, 20ஆம் தேதிகளில் நடைபெறும் இவ்விழாவில், வாழ்க்கைத்தொழில் ஆலோசனை, வேலைப் பயிற்சி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகள், புதிய வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைக் குடியிருப்பாளர்கள் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
“எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதே இன்றைய சூழலில் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
“முதலாளிகள் தங்கள் ஊழியர்களிடம் எதிர்பார்க்கும் திறன்களையும் ஊழியர்கள் வேலையிடத்தில் எதிர்பார்க்கும் பயன்களையும் பற்றிக் கலந்துரையாடிப் புரிந்துகொள்ள இது நல்ல தளமாக விளங்குகிறது,” என்றார் திரு தினேஷ்.
குறிப்பாகத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதைக் கவனித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தங்கள் கல்வித் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு வேலை தேடும் புதிய பட்டதாரிகள், பணியில் மேலும் வளரத் தங்கள் திறமைகளை மேம்படுத்த விரும்பும் பணியாளர்கள், வேறொரு துறைக்குப் பணிமாற்றம் செய்ய விரும்பும் நடுத்தர வயதினர் எனப் பல்வேறு தரப்பினர் பயனடைய இவ்விழா வழிவகுக்கிறது.
“இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் இளையர்கள் கலந்துகொள்ளும்போது, அரசாங்கம் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பதை உணருவர்,” என்றார் விழாவில் கலந்துகொண்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி யோகீஸ்வரன், 61.
இளையர்கள் வாழ்க்கை மீது கொண்டுள்ள பயம் குறைவதோடு, வாழ்நாள் கற்றல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்வதற்கான வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.