பேருந்து நிறுத்தங்களிலும் நடையர் மேம்பாலங்களிலும் ‘ஸ்மார்ட்’ விளக்குகள்

பேருந்து நிறுத்தங்களிலும் நடையர் மேம்பாலங்களிலும் ‘ஸ்மார்ட்’ விளக்குகள்

2 mins read
8417dac3-3487-4bce-9333-1eeffb8a333f
தெருவிளக்குகள் அனைத்தையும் விவேக விளக்குகளாக மாற்றிய முதல் நாடு சிங்கப்பூர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், தொலைவில் இருந்து இயக்கப்படும் விவேக (ஸ்மார்ட்) விளக்குகள் தெருவிளக்குகளாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், அத்தகைய விளக்குகள் மேலும் பல இடங்களில் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் 110,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. அவை அத்தனையும் கடந்த ஆண்டு விவேக விளக்குகளாக மாற்றப்பட்டுவிட்டன.

தொலைவில் இருந்து கண்காணித்து இயக்கப்படும் RCMS தொழில்நுட்பம் மூலம் அந்த விளக்குகள் இயக்கப்படுகின்றன. அதனால், பருவநிலைக்கு ஏற்ப நாள் முழுவதும் அவற்றை எரிய வைக்க முடியும்.

2023 செப்டம்பரில் தெரு விளக்குகள் அனைத்தும் விவேக விளக்குகளாக மாற்றப்பட்ட பின்னர், அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய முதல் நாடு என்ற பெருமை சிங்கப்பூருக்குக் கிடைத்தது.

மின்விளக்குகளில் கோளாறு ஏற்படும்போது அதனை நேரடியாகச் சென்று பழுதுபார்க்கவும் விளக்குகளை அணைக்க அல்லது எரியவிடவும் மனித உழைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது.

விவேக விளக்குகள் அறிமுகம் கண்ட பின்னர் மனித உழைப்பும் எரிசக்தியும் மிச்சமாவதைக் காணமுடிந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.

அத்துடன், ஆற்றல் மிக்கதாகவும் பராமரிப்பை வேகமாகச் செய்யக்கூடியதாகவும் விவேக விளக்குகள் உள்ளதாக அது கூறியது.

அந்த அளவுக்குப் பயனுள்ள விளக்குகளை தீவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொருத்தும் பணியை அது விரிவுபடுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

350 கிலோமீட்டர் நடைபாதை, 525 கிலோமீட்டர் சைக்கிளோட்ட பாதை ஆகியவற்றுடன் 560 நடையர் மேம்பாலங்களிலும் 4,400 பேருந்து நிறுத்தம் மற்றும் டாக்சி நிறுத்தங்களிலும் விவேக விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக ஆணையம் புதன்கிழமை (அக்டோபர் 2) அறிவித்து உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பயணிகளுக்கான வசதிகளில் 30 விழுக்காட்டுப் பகுதிகளில் மட்டும் அந்த விளக்குகள் உள்ளன. அவை, இவ்வாண்டு மார்ச் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடையில் பொருத்தப்பட்டவை.

2025ஆம் ஆண்டு நடுவில் எல்லா இடங்களிலும் விவேக விளக்குகள் பொருத்தப்பட்ட பின்னர் ஆண்டுக்கு ஏறக்குறைய 0.124 மில்லியன் கிலோவாட் எரிசக்தி மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்