தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விவேக தள்ளுவண்டிகள்: ஃபேர்பிரைஸ் சோதனை

2 mins read
3f69d93f-02ea-4df1-9d5b-e725f8a41daa
‘ஸ்மார்ட் கார்ட்ஸ்’ விவேகத் தள்ளுவண்டி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காங் கிராண்ட் மால் கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் சிலர் விவேக தள்ளுவண்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே வாடிக்கையாளர்கள் இந்தத் தள்ளுவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் தொடுதிரைகளும் ‘பார்கோட்’ குறியீடுகளை வருடும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

பேரங்காடிக்குள் வழி காட்டுவது, வாங்கும் பொருள்களுக்குச் சொந்தமாகவே பதிவுசெய்து கட்டணம் செலுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ‘ஸ்மார்ட் கார்ட்ஸ்’ (Smart Carts) விவேக தள்ளுவண்டிகள் கைகொடுக்கின்றன.

இவை கடந்த மே மாதம் முதல் செங்காங் ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் சோதனையிடப்படுகின்றன.

இந்தத் தள்ளுவண்டிகளும் பேரங்காடியில் இடம்பெற்றுள்ள மற்ற மின்னிலக்க அம்சங்களும் ‘வருங்காலத்துக்கான கடை’ (Store of Tomorrow) எனும் இயக்கத்தில் அங்கம் வகிக்கின்றன. மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடக்கும் தேசிய சில்லறை வர்த்தகச் சம்மேளனத்தின் ‘ரிட்டெய்ல்ஸ் பிக் ‌ஷோ ஏ‌ஷியா பசிபிக் 2025’ (Retail’s Big Show Asia Pacific 2025) நகழ்ச்சியில் ஃபேர்பிரைஸ் இயக்கத்தைப் பற்றி அறிவித்தது. அந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமையிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 3-5) வரை நடக்கும்.

பல்வேறு வழிகளில், பல தளங்களில் வாடிக்கையாளர்கள் ஃபேர்பிரைஸ் பொருள்களை வாங்குவதுண்டு; அவை அனைத்திலும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுக்காகச் செலவிட 2028ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு மில்லியன் கணக்கில் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி விப்புல் சாவ்லா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

ஃபேர்பிரைசின் பல்வேறு கிளைகளில் வாடிக்கையார்கள் தாங்களே பொருள்களைப் பதிவுசெய்து, கட்டணம் செலுத்தி வாங்குவதற்கான வசதி, ஃபேர்பிரைஸ் செயலியில் குறியீட்டை வருடி பொருள் வாங்கும் வசதி, கடைக்குள் வழிகாட்டும் குறிப்புகள் உள்ளிட்டவை தற்போது நடப்பில் உள்ளன. இருந்தாலும் பல வேளைகளில் பேரங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழி காண்பிப்பது போன்ற வழிகளில் உதவ வேண்டியுள்ளது.

“கடையில் பொருள்களை வாங்கும் நடவடிக்கை பரிவர்த்தனை மட்டுமின்றி அனுபவமாகவும் விளங்குகிறது. அந்த அனுபவத்தை மேலும் விறுவிறுப்பான, அதிக ஈர்ப்புத் தன்மை உள்ள கூடுதல் ஈடுபாட்டை உருவாக்கும் ஒன்றாக உருவாக்கலாம்,” என்றார் திரு சாவ்லா.

செங்காங் ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனையில் தற்போது 10 விவேக தள்ளுவண்டிகள் இடம்பெற்றுள்ளன. பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் திறக்கப்படவிருக்கும் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் கிளையில் மேலும் பெரிய அளவில் ‘ஸ்மார்ட் கார்ட்ஸ்’ தள்ளுவண்டிகள் சோதனையிடப்படும்.

குறிப்புச் சொற்கள்