சொகுசுக் கப்பல் சுற்றுலா மூலம் $12.7 பில்லியன் வருவாய் ஈட்டிய தென்கிழக்காசியா

சொகுசுக் கப்பல் சுற்றுலா மூலம் $12.7 பில்லியன் வருவாய் ஈட்டிய தென்கிழக்காசியா

2 mins read
4f92db80-1cd9-4bdc-b986-f445132f4646
கடந்த 2024ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய வட்டார மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சொகுசுக் கப்பல் சுற்றுலாத்துறை $5.8 பில்லியன் பங்களித்தது. - படம்: டிஸ்னி குரூஸ் லைன்
multi-img1 of 2

தென்கிழக்காசியாவின் சொகுசுக் கப்பல் சுற்றுலாத்துறை கடந்த 2024ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (S$12.7 பில்லியன்) வருவாய் ஈட்டியது.

உலகளவிலான சொகுசுக் கப்பல் சுற்றுலாத் துறையின் வருவாயில் இது 5 விழுக்காடு. பயணி ஒருவர் மூலம் சராசரியாக $3,308 வருவாய் ஈட்டப்பட்டது. இது உலகச் சராசரியைப்போல் 2.4 மடங்கு.

அனைத்துலக அளவில் சொகுசுக் கப்பல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இரண்டு விழுக்காடு, அதாவது 3.9 மில்லியன் பேர் மட்டுமே தென்கிழக்காசிய வட்டாரத்தின் பங்கு என்றபோதும் இந்த வலுவான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. உலக அளவில் 2024ஆம் ஆண்டு 186 மில்லியன் பேர் சொகுசுக் கப்பலில் சுற்றுலா சென்றனர்.

முதலாவது ‘தென்கிழக்காசிய நாடுகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுலாத் துறையின் பொருளியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை’யில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அனைத்துலகச் சொகுசுக் கப்பல் நடத்துநர் சங்கத்திற்காக (சிஎல்ஐஏ) ‘டூரிசம் எக்கனாமிக்ஸ்’ நிறுவனம், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்துடன் இணைந்து இந்த மதிப்பீட்டு அறிக்கையைத் தயார்செய்தது.

கடந்த 2024ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய வட்டார மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சொகுசுக் கப்பல் சுற்றுலாத்துறை $5.8 பில்லியன் பங்களித்தது. சொகுசுக் கப்பல் சார்ந்த உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 5 விழுக்காடு.

சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணிகளில் 85 விழுக்காட்டினர் தங்களது தென்கிழக்காசிய அனுபவம் குறித்து நேர்மறையாகக் கருத்துரைத்துள்ளனர். அவர்களில் 47 விழுக்காட்டினர் மீண்டும் இந்த வட்டாரத்திற்குத் திரும்பி, தரைவழியாகப் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முதலிடத்தில் சிங்கப்பூர்

2024ஆம் ஆண்டிற்கான தென்கிழக்காசிய சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணிகளில் 70 விழுக்காட்டினர் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் வருகைபுரிந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன. இவ்வட்டாரத்திற்கான 3.9 மில்லியன் சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணிகளில் 48 விழுக்காட்டினரைச் சிங்கப்பூரும் 22 விழுக்காட்டினரை மலேசியாவும் ஈர்த்தன.

இந்தக் காலகட்டத்தில் சுற்றுலா, துறைமுகம் சார்ந்த பணிகள் உட்பட கிட்டத்தட்ட 530,000 வேலைகளுக்குச் சொகுசுக் கப்பல் தொழில்துறை ஆதரவளித்தது. அனைத்துலக அளவில் சொகுசுக் கப்பல் சார்ந்த வேலைவாய்ப்புகளில் இது 30 விழுக்காடு.

இந்நிலையில், “அதிகரித்துவரும் நடுத்தர வருமானக் குடும்பங்களின் எண்ணிக்கை, பலவகைப்பட்ட பயண அனுபவங்களுக்கான அதிகரித்துவரும் தேவை, வளமான சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றால் உந்தப்பட்ட தென்கிழக்காசியாவின் வலுவான சொகுசுக் கப்பல் சுற்றுலா மதிப்பை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது,” என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் அனுபவ மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி ஜேன் இங் தெரிவித்துள்ளார்.

இந்த வட்டார நாடுகள் அனைத்தும் பொருளியல் சார்ந்து நீடித்த பயன்பெறும் வகையில், அவற்றுடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்