புகைமூட்டத்தை எதிர்கொள்ளத் தென்கிழக்கு ஆசியா தயாராகவேண்டும்: கிரேஸ் ஃபூ

புகைமூட்டத்தை எதிர்கொள்ளத் தென்கிழக்கு ஆசியா தயாராகவேண்டும்: கிரேஸ் ஃபூ

2 mins read
a7a9b705-8201-4b1c-aef1-79f176d5aa6b
பருவநிலை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டின் பிற்பகுதியில் புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

‘காட்ஸிலா எல் நினோ’ சுழற்சி காரணமாக இவ்வாண்டின் பிற்பகுதியில் வெப்பம் மற்றும் வறண்ட சூழ்நிலைகள் ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவை கடுமையான காட்டுத் தீயையும் புகைமூட்டத்தையும் தூண்டக்கூடும் என்று வியாழக்கிழமை (மே 7) காலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அமைச்சர் குறிப்பிட்டார்.

‘ஒன் ஃபேரர்’ ஹோட்டலில் நடைபெற்ற அந்த வருடாந்தர நிகழ்ச்சியில் நிலையாக நீடிக்கவல்ல உலக வளங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் பங்கேற்றுப் பேசிய திருவாட்டி ஃபூ, புவிசார் அரசியல், பருவநிலை மாற்றம் என்னும் இரட்டைத் தாக்குதலால் தென்கிழக்கு ஆசியா பெரியதொரு நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்றார்.

அந்த நெருக்கடி காரணமாக இந்த வட்டார வேளாண் பொருள் உற்பத்தித் துறைக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இனி வரும் மாதங்களில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமும் வறட்சியும் எதிர்பார்க்கப்படுவதாகவும் திருவாட்டி ஃபூ தமது உரையில் குறிப்பிட்டார்.

“சில வானிலை ஆய்வு நிறுவனங்கள் ஒரு ‘சூப்பர் எல் நினோ’ அல்லது ‘காட்ஸிலா எல் நினோ’ சுழற்சியைக் கணித்துள்ளன.

“அந்தச் சுழற்சியைக் குறிப்பிட்டு உலக வானிலை ஆய்வு நிறுவனமும் ஒரு முன்னுரைப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படக்கூடிய வறட்சி உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை அச்சுழற்சி அதிகரிக்கக்கூடும் என்று அந்த முன்னுரைப்பு கூறுகிறது,” என்றார் அமைச்சர் ஃபூ.

குறிப்புச் சொற்கள்