கனிவன்பு எனும் நற்பண்பு இளம்பருவத்திலேயே விதைக்கப்படும்போது அது வலுவான சமூகத்திற்கான வித்திடும் என்று சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் மிஷல் டே தெரிவித்திருக்கிறார்.
பள்ளிகளுக்கு வெளியேயும் கனிவான நற்செயல்கள் இடம்பெறவும் சிங்கப்பூரைக் கனிவன்பு மிளிரும் சமூகமாக மாற்றுவதற்குச் சிறார்களின் பங்களிப்புகளை மேலும் ஊக்குவிக்கும் இலக்குடனும் இவ்வாண்டு பள்ளிகளுக்கான கனிவன்பு தினக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
அவ்வகையில், செவ்வாய்க்கிழமை (மே 13) காலை லியன் ஹுவா தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு அன்பு, கனிவு உள்ளிட்ட பண்புநலன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பல்வேறு அமர்வுகள் நடத்தப்பட்டன.
அதையொட்டி கருத்துரைத்த திருவாட்டி டே, இணையம்வழி அரங்கேறும் பகடிவதையைச் சுட்டிப் பேசினார்.
அத்தகைய எதிர்மறையான செயல்களுக்கு எதிராக மாணவர்கள் துணிவுடன் குரல்கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இணையத்தில் கனிவுமிக்க பாங்கோடு நடந்துகொள்வது எப்படி என்று தொடங்கி, சிறுசிறு செயல்கள் வழியாகவும் சமூகத்தில் கனிவை மலரச் செய்வது எப்படி என்பதை விளக்கும் காணொளிகள், கனிவான கேலிச்சித்திரங்கள் பங்குபெற்ற நடனம் உள்ளிட்டவை மாணவர்களுக்காக அரங்கேறின.
இது குறித்து தமிழ் முரசிடம் கருத்துரைத்த திருவாட்டி டே, “கனிவாக இருப்பதற்கும் சக மனிதரை மரியாதையுடன் நடத்துவதற்கும் பேரளவிலான நடவடிக்கைகள் தேவைப்படாது.
“’மன்னியுங்கள்’, ‘தயைகூர்ந்து’ போன்ற சிறு சொற்கள்கூட கனிவின் அடையாளமாகப் பிள்ளைகளிடம் இளம் வயதிலேயே வேரூன்றத் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
“எடுத்துக்காட்டாக, துப்புரவுப் பணி செய்யும் மூத்த ஊழியர் ஒருவருக்குப் பிள்ளைகள் நன்றி என்று சொல்வது மிக எளிதான செயலாகத் தோன்றினாலும், அச்செயலால் அப்பணியாளர் முகத்தில் மலரும் புன்னகை மிகச்சிறந்த நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார்.
எனவே, அத்தகைய செயல்களை இயக்கமாகப் பள்ளிகளிலும் சமூகத்திலும் செயல்படுத்தும்போது கனிவு குறித்த தொடர்ச்சியான கல்விக்கும் கற்றலுக்கும் அது வழிவகுக்கும் என்று திருவாட்டி டே குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் பள்ளிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதைச் சுட்டிய திருவாட்டி டே, “அம்முயற்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியவர்கள் ஆகியோர் பிள்ளைகளுக்குத் தகுந்த முன்மாதிரியாகச் செயல்படவேண்டும். அப்போதுதான் கனிவும் பரிவும் சேர்ந்த வலுவான சமுகத்தைச் சிறார்கள் சிறப்பாகக் கட்டியெழுப்புவர்,” என்றும் சொன்னார்.
சிங்கப்பூர் தனது 60ஆம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில், கனிவன்பு சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க, அத்தகைய நற்செயல்களைக் கொண்டாட, சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் மே 23 முதல் சாங்கி விமான நிலைய முனையம் 2ல் ஒரு மாத காலக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.