சிங்கப்பூர் பவர் (எஸ்பி) குழுமம்அதன் 30ஆம் ஆண்டு நிறைவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட $1 மில்லியன் வரை நன்கொடை வழங்கவுள்ளது.
‘எஸ்பி ஹார்ட்வேர்’ நிதிக்கு இவ்வாண்டு இறுதிவரை, அதன் ஊழியர்கள் நன்கொடையாக வழங்கும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஈடாக மூன்று வெள்ளியைக் குழுமம் நன்கொடையாக வழங்கும்.
மேலும், சிங்கப்பூரின் அறுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள ‘எஸ்ஜிஷேர்’ முயற்சியால், இந்நிதி வழி நன்கொடையாகத் தரப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ‘எஸ்ஜி கிவ்ஸ்’ மானியம் கூடுதலாக ஒரு வெள்ளி வழங்கும்.
ஆகையால், எஸ்பி குழுமப் பணியாளர்கள் ஒரு வெள்ளி நன்கொடையாகக் கொடுக்கும்பொழுது, மொத்தம் எட்டு வெள்ளி சமூக சேவை நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும்.
2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிதி இதுவரை முதியோர், இளையர்களுக்கான சமூக சேவை நடவடிக்கைகள் பலவற்றுக்கு $30 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைத் திரட்டித் தந்துள்ளது.
எஸ்பி குழுமத் தலைமை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (4 ஜூன்) நடைபெற்ற சமூகக் கொண்டாட்டத்தில் இத்தகவல் அறிவிக்கப்பட்டது.
முதல் முறையாக நடத்தப்பட்ட இக்கொண்டாட்டத்தில், ‘எஸ்ஜி60 ஜர்னிஸ் ஃபிரம் த ஹார்ட்’ என்ற சிறப்புச் சுற்றுலாத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், ஜூன் விடுமுறைக் காலத்திலிருந்து தேசிய தினம் வரை முதியோர், இளையர்கள், சிறார் என 600 பேர் மின்சாரப் பேருந்துகளில் செந்தோசா, மெர்லயன் பூங்கா போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
இம்முயற்சியைத் தொடங்கிவைக்கும் வண்ணம், கொண்டாட்டத்தின் முடிவில் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தைச் சேர்ந்த முதியோர் சிலர் மெரினா பே பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
‘எஸ்பி ஹார்ட் வொர்க்கர்ஸ்’ எனப்படும் எஸ்பி குழும ஊழியர் தொண்டூழியர்கள் இப்பயணங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபடுவர்.
திட்டத்தின் மற்றோர் அங்கமாக எஸ்பி குழும ஊழியர்கள் மொத்தம் $300,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் நிறைந்த அன்பளிப்புப் பைகளை 10,000 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வழங்குவர்.
“எஸ்பி குழுமம் நீண்ட காலமாக, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர், சிறுவர்கள், இளையர்கள் ஆகியோருக்குப் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. காலத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப இந்த நடவடிக்கைகளை மாற்றியும் வருகிறோம். எங்கள் ஊழியர்கள் நிறுவன வளர்ச்சிக்கு மட்டுமன்றி சமூக வளர்ச்சிக்கும் பங்காற்றுகின்றனர்,” என்று குழுமத் தலைவர் லியோங் வாய் லெங் தமது உரையில் கூறினார்.
தன் நண்பர்களுடன் இத்தகைய சுற்றுலாவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்த முதியோரில் ஒருவரான 78 வயது ஃபிரேடா சில்வா கூறினார்.
“இத்தகைய நடவடிக்கைகளால் வீட்டிலேயே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு முடங்கிக் கிடப்பதற்கு மாறாக, பாதுகாப்பான சூழலில், பிடித்தவர்களுடன் வெளியே செல்ல முடிகிறது,” என்றார் அவர்.
முதியோர்க்கான சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைப்பதாகக் கூறினார் எஸ்பி குழுமத் தொழில்நுட்ப நிர்வாகியும் தொண்டூழியருமான பிரவீன் ஸ்ரீதரன்.
“இந்தத் திட்டத்தில் தொண்டூழியம் செய்வதன் வழி முதியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிவதோடு, தொண்டூழியம் செய்யும் சக ஊழியர்களுடனும் நல்ல நட்புறவு ஏற்படுகிறது,” என்றார் அவர்.

