அதிவேகமாக காரோட்டி விபத்து: ஆடவர்மீது ஆறு குற்றச்சாட்டுகள்

அதிவேகமாக காரோட்டி விபத்து: ஆடவர்மீது ஆறு குற்றச்சாட்டுகள்

படம்: சிங்கப்பூர் காவல் துறை

27 Oct 2026 - 6:57 pm

2 mins read

முன்னதாக மூன்று முறை ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியதற்காகத் தண்டிக்கப்பட்ட 43 வயது ஷைஃபுல் ரிட்ஸ்வான் அப்துல் ரசாக், மீண்டும் அதே குற்றத்தைச் செய்து விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது நீதிமன்றத்தில் ஆறு குற்றச்சாட்டுகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) சுமத்தப்பட்டன.

ஆபத்தான முறையில் வாகனமோட்டி, பொதுமக்களுக்குக் காயம் ஏற்படுத்தியது, விபத்துக்குப் பின்னர் காரை நிறுத்தத் தவறியது, உரிமமின்றி வாகனம் ஓட்டியது, சீருடையிலிருந்த காவல் அதிகாரி சொல்லியும் காரை நிறுத்தாதது, காப்புறுதி இல்லாத வாகனத்தை ஓட்டியது, விபத்துக்குப் பின்னர் உதவத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில், மரினா பே பகுதியிலுள்ள ராஃபிள்ஸ் அவென்யூவில் மெர்சிடீஸ் பென்ஸ் காரை உரிமமின்றி ஷைஃபுல் ஓட்டிச் சென்றார். அங்கு பணியிலிருந்த காவலர்கள் காரை நிறுத்த முயன்றபோது, அவர் நிறுத்தாமல் காவலர்களை உரசிச் சென்று தப்பியோடியுள்ளார்.

கண்காணிப்பு வாகனம் அவரைத் துரத்தியபோது, பேப்ரண்ட் அவென்யூ போக்குவரத்துச் சமிக்ஞையில் நின்றிருந்த மற்றொரு காரையும், பக்கத்தில் வந்த காவல் வாகனத்தின் கதவையும் மோதிவிட்டு அவர் வேகமாகச் சென்றார். விபத்தில் மோதப்பட்ட வாகனத்தின் ஓட்டுநருக்கு முதுகுவலி ஏற்பட்டு, அவருக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

சிகப்பு விளக்குகளில் நிறுத்தாமல் ஷைஃபுல் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரது காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரைப் பிடித்தனர்.

முன்னதாக இவர் 2002 மார்ச் 28, 2006 நவம்பர் 1, 2020 நவம்பர் 23 ஆகிய தேதிகளில் உரிமமின்றி வாகனம் ஓட்டியதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிப் பிறருக்குக் காயம் விளைவித்த குற்றத்திற்கு ஈராண்டுகள் வரை சிறை அல்லது $10,000 அபராதம் விதிக்கப்படலாம். உரிமமின்றி வாகனம் ஓட்டி மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறை, $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். ஆடவருக்கான பிணை மறுஆய்வு நவம்பர் 3ஆம் தேதி இடம்பெறும்.

குறிப்புச் சொற்கள்