சமூகக் கூட்டு முயற்சி மூலம் கொடுக்கும் மனப்பான்மை வலுவடைந்துள்ளது

சமூகக் கூட்டு முயற்சி மூலம் கொடுக்கும் மனப்பான்மை வலுவடைந்துள்ளது

2 mins read
9298ca57-a1b1-4d51-afee-37dfe90b07f4
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நான்கில் மூவர் பரஸ்பர உதவி, தன்னார்வத் தொண்டு, நன்கொடை அளித்தல் போன்ற அன்றாடச் செயல்களில் ஈடுபட்டதாக சென்றாண்டு தேசிய கொடை ஆய்வு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெற்றோரின் முன்மாதிரி, நெருக்கமான சமூகக் கட்டமைப்புகள், ஆதரவான சூழல்கள் போன்றவை கொடுக்கும் பழக்கவழக்கங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் காட்டின.

தங்களைச் சுற்றியுள்ளவர்கள் நன்கொடை வழங்கும்போது தாங்களும் தன்னார்வத் தொண்டாற்றவோ நன்கொடை அளிக்கவோ அதிக வாய்ப்புள்ளதாகவும் அதை அடிக்கடி செய்வதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கருதினர்.

3,600க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த இந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) நல்லதோர் நகர மன்றத்தில் பகிரப்பட்டன.

‘ஒன்றிணைந்த உணர்வு, ஒன்றிணைந்த தாக்கம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற மன்றத்தில் மக்கள், தனியார், பொதுத் துறைகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தலைவர்கள், மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் ஒன்றுகூடினர்.

கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தமது உரையில் அவர் நிச்சயமற்ற சூழலில், மக்களுக்கு இடையேயான நம்பிக்கை, ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை, அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்ற பொதுவான நம்பிக்கை ஒரு சமூகத்தை வலுவாக வைத்திருக்க உதவும் என்று வலியுறுத்தினார்.

‘நாம் முதலில்’ என்ற சமுதாயத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் பங்கேற்பதற்கான மிகவும் உறுதியான வழிகளில் கொடுக்கும் மனப்பான்மையும் ஒன்று என்றார் அவர்.

அன்றாட வாழ்வில் மற்றவர்களுக்கு ஆதரவளிக்க முன்வருவது முதல் நேரம், திறன்கள், நிபுணத்துவம் வழங்குவது, நன்கொடை மூலம் வளங்களைப் பங்களிப்பது வரை பல வடிவங்களில் கொடுக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்த முடியும் என்று திரு தினேஷ் கூறினார்.

தனிநபர்கள் தங்கள் குழுக்கள், சமூகங்களில் பங்களிப்பதற்கான சூழல்களை அரசாங்கம் தொடர்ந்து உருவாக்கும் என்று சொன்னார் அவர்.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த எஸ்ஜி பங்காளித்துவ நிதி இதற்கு ஏதுவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய தொண்டூழியம், அறக்கொடை நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்த மன்றத்தில் சென்றாண்டின் தேசிய கொடை ஆய்வு, கொடுக்கும் மனப்பான்மையை ஊக்குவிப்பதில் முன்மாதிரிகள், சக நண்பர்களின் செல்வாக்கு, ஆதரவான சூழல்கள் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொண்டூழியமானது அதிக சமூகக் கலப்பு, விரிவான சமூக இணைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதாகவும் அதில் தெரியவந்தது.

கொடுக்கும் மனப்பான்மையை ஊக்குவிக்க இளையர்களை மையப்படுத்திய அங்கீகாரத்தின் மூலம் சிறுவயதிலேயே கொடுக்கும் பழக்கவழக்கங்களை வலுப்படுத்துதல், சமூக ஆதரவை வலுப்படுத்துதல், அங்கீகரித்தல், இணையவழி ஈடுபாட்டிலிருந்து நேரடிப் பங்கேற்புக்கான வழிகளை வடிவமைத்தல் போன்ற உத்திகள் பயன்படுத்தப்படலாம் என தேசிய கொடை ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்