சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு கடந்த 60 ஆண்டுகளில் கணிசமான மாற்றங்களைக் கண்டுள்ளதாகவும் இப்போது இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு உகந்த நிலையில் இருப்பதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
இருநாடுகளின் பல்லாண்டுகால பங்காளித்துவம், நிச்சயமற்ற, பிளவுபட்ட, இடையூறுகள் நிறைந்த சூழலை எதிர்கொள்ளும் தற்போதைய உலகில் செயல்படுவதற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர், ஜப்பானிடமிருந்து உதவியையும் முதலீடுகளையும் பெற்றுவந்தபோது அவற்றுக்கு இடையிலான இருதரப்பு உறவு தொடங்கியதாக திரு வோங் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, அது பன்முகத்தன்மை கொண்ட, இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடிய பரஸ்பர பங்காளித்துவமாக வளர்ந்ததாக அவர் சொன்னார்.
திரு வோங் மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் செல்கிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் பதவியேற்றதிலிருந்து, இந்த வட்டாரத்தில் முக்கியப் பங்காளி நாடுகளுக்கு மேற்கொள்ளும் அறிமுகப் பயணங்களின் ஒரு பகுதியாக, ஜப்பானியப் பயணம் அமைகிறது.
அங்கு, அவர் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியைச் சந்திக்கவிருக்கிறார்.
1970களில் தொஷிபா, சுமிடோமோ, மிட்சுய் போன்ற முன்னணி ஜப்பானிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்படத் தொடங்கின. அவற்றின்மூலம் வேலைகள் உருவாயின; அப்போது குடியரசின் பொருளியல் தொடக்கக்கட்டத்தில் இருந்த காலத்தில் வலுவான உற்பத்தித் தளம் அமைத்துத் தரப்பட்டதாக திரு வோங் குறிப்பிட்டார்.
1980களில் தரத்திலும் உற்பத்தித் திறன் மேம்பாடுகளிலும் அறிவாற்றலைப் பகிர்ந்துகொள்ள ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகளால் சிங்கப்பூர் பயன்பெற்றது. அதே காலகட்டத்தில் சிங்கப்பூரில் ஜப்பான் செய்த முதலீடுகளும் அதிகரித்தன.
தொடர்புடைய செய்திகள்
1994ஆம் ஆண்டில் மூன்றாம் நாடுகளுக்குத் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கான ஜப்பானின் முதல் திட்டத்தைத் தொடங்க, இரு நாடுகளும் இணைந்து பணியாற்றின. அந்தத் திட்டம் இன்றுவரை நடப்பில் உள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரும் ஜப்பானும் ஏற்கெனவே திடமாக உள்ள அவற்றின் பொருளியல் உறவை மேலும் வலுப்படுத்தலாம் என்று திரு வோங் கூறினார். அதோடு, மின்னிலக்கப் பொருளியலிலும் புதிய வாய்ப்புகளை அவை நாடலாம் என்றார் அவர்.
அவை இரண்டும் ஒன்றிணைந்து அனைத்துலகத் தரங்களை வடிவமைத்து, மின்னிலக்க வர்த்தகத்திற்குத் தேவையான நம்பகமான எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கலாம் என்றும் திரு வோங் கூறினார்.

