உலக நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்திருப்பதைத் தொடர்ந்து வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருக்கும் சிங்கப்பூர், மாற்றங்களுக்கு ஏற்றவாறு துடிப்புடன் இயங்கவேண்டும் என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளரும் சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
அவர் சனிக்கிழமை (ஏப்ரல் 5) ஃபேஸ்புக்கில் அவ்வாறு பதிவிட்டார். வர்த்தகத்தை நம்பியிருக்கும் நாடுகள் மாற்றம், நிச்சயமற்ற சூழல் ஆகிய சவால்களை என்றும் எதிர்நோக்கக்கூடும் என்பதைச் சுட்டிய அவர், குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற சூழல்களில் சிங்கப்பூர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியதைத் தாம் ஒப்புக்கொள்வதாகச் சொன்னார்.
“வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் போன்ற ஒரு நாடு துடிப்புடன், வேகமாக இயங்கும் ஒன்றாக இருப்பது அவசியம். புதிய வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று திரு சிங் குறிப்பிட்டார். மேலும் வழக்கத்துக்கு மாறான சூழலை எதிர்கொள்ளும்போது ஒரே பாதையில் பயணம் செய்ய நமக்கிடையே இருக்கக்கூடிய கருத்துவேறுபாடுகளையும் தாண்டி சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
“எல்லா சிங்கப்பூரர்களையும் பிரதிநிதிக்கும் நாடாளுமன்றம், ஒன்றுபட்ட சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் என்று நானும் எனது சக பணியாளர்களும் நம்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
திரு டிரம்ப்பின் வரிவிதிப்பு, உலக நாடுகள் இயங்கும் முறையில் வரும் அதிரடியான மாற்றம் என்று பிரதமர் வோங் முன்னதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 4) காணொளிவழி தமது சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். இவ்வேளையில் மனவுறுதியிடன் ஒன்றுபட்டிருக்குமாறு அவர் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.