வெப்பநிலை அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு எனப் பருவநிலை மாற்றங்கள் கணிக்க முடியாத அளவுக்கு நிகழ்ந்து வருகின்றன.
இதனையடுத்து, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தின் சவால்களை ஒருங்கிணைந்த தேசமாக சமாளிப்பது உள்ளிட்ட இலக்குகளில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கவனம் செலுத்தவிருக்கிறது.
அவ்வகையில், பருவநிலைத் தகவமைப்பு தேசிய முன்னுரிமையாகக் கருதப்படும் அம்சமாக உருவெடுத்துள்ளது. அந்த இலக்கை எட்டும் நோக்குடன் 2026ஆம் ஆண்டு ‘பருவநிலைத் தகவமைப்பை முன்னிறுத்தும் ஆண்டு’ எனக் குறிக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, சிங்கப்பூரின் பருவநிலை, நீர், உணவு மீள்திறனை வலுப்படுத்த நீண்டகாலப் பருவநிலைத் தகவமைப்பு முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்துவதில் அமைச்சு உறுதியாக உள்ளது என்றார் அவர்.
பருவநிலையை எதிர்கொள்ளத் தயாராவதற்கு ஏதுவான நீண்டகால உத்தியாகக் கருதப்படும் நாட்டின் முதல் தேசியத் தகவமைப்புத் திட்டத்தின் குறிக்கோள்களை அமைச்சர் வெளியிட்டார்.
வெப்பத்திலிருந்து பாதுகாக்க வெப்ப மீள்திறன்; மழைப்பொழிவின்போது பெருக்கெடுக்கும் வெள்ளத்தைச் சமாளிக்க வெள்ள மீள்திறன்; கடல்மட்டம் உயரும்போது கைகொடுக்க கடலோர மீள்திறன்; தடங்கல் நேர்ந்தாலும் தடையின்றி சிங்கப்பூருக்கு அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் நீர் மற்றும் உணவு மீள்திறன் ஆகியவை நாட்டின் தகவமைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்று விவரித்தார் அவர்.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி ஃபூ, புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகளை அறியவும், அதனை எதிர்கொள்ள புத்தாக்கமிக்க குளிர்விக்கும் தீர்வுகளை உருவாக்கவும் அதற்கான ஆய்வு மேம்பாட்டுத் திட்டங்களில் கூடுதல் முதலீடு செய்யப்படும் என்று சொன்னார்.
வடிகால் உட்கட்டமைப்பின் தன்மையை அமைச்சு தொடர்ந்து ஆய்வுசெய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வடிகால் அமைப்புத் திட்டங்கள் பலவும் செயலாக்கம் காணும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ள அபாயங்களைக் குறைக்க, பிடோக் முதலாவது கிளை வடிகால் மற்றும் சுங்கை சிராங்கூன் கிழக்கு, மேற்கு கிளை வடிகால்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் திருவாட்டி கிரேஸ்.
நாட்டின் கடலோரப் பாதுகாப்புப் பயணத்திற்கான திட்டங்கள் குறித்தும் விளக்கிய அமைச்சர், கடலோரப் பாதுகாப்பு மசோதா இரண்டாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் சொன்னார்.
மேலும், பருவநிலை, வானிலைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையில் வெப்பத் தாக்க உணர் கருவிக் கட்டமைப்பும் விரிவாக்கம் காணவுள்ளது.
பருவநிலை மாற்றம் அனைவரையும் பாதிப்பதால், நாட்டின் தேசியத் தகவமைப்புத் திட்டத்தை வடிவமைப்பதில் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உள்ள வாய்ப்பு இன்றியமையாதது என்று சுட்டிய அமைச்சர் ஃபூ, “இது பருவநிலைத் தகவமைப்பிற்கு ஏற்றவாறு செயல்படுவதற்கான நேரம்,” என்றார்.
எதிர்காலத்திற்கான பருவநிலை மீள்திறனுக்கு ஏற்ற வலிமையான அடித்தளத்தை அமைக்கவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

