ஆட்சேபணைக்குரிய யூடியூப் காணொளிப் பதிவேற்றம்: முன்னிலை வகிக்கும் 10 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்

ஆட்சேபணைக்குரிய யூடியூப் காணொளிப் பதிவேற்றம்: முன்னிலை வகிக்கும் 10 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்

2 mins read
bbd1631b-77cd-4be9-b2c3-3986c34a5ba6
2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான அண்மைய அறிக்கையில், சிங்கப்பூர் கிட்டத்தட்ட 100,000 நீக்கங்களுடன் 10வது இடத்தைப் பிடித்தது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக நீக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான யூடியூப் காணொளிகளை பதிவேற்றம் செய்த முதல் 10 நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று.

கூகல் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, யூடியூப் உரிமையாளரான கூகல் 2023ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் சிங்கப்பூரில் 1.2 மில்லியன் ஆட்சேபணைக்குரிய காணொளிகளை நீக்கியுள்ளது. இது இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது இடமாகும்.

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான அண்மைய புள்ளிவிவர அறிக்கையில், சிங்கப்பூர் கிட்டத்தட்ட 100,000 நீக்கங்களுடன் 10வது இடத்தில் வந்தது.

இந்தக் காலகட்டத்தில் நீக்கப்பட்ட உள்ளடக்கத்தில் 40 விழுக்காடு குழந்தைகள் பாதுகாப்பை மீறியுள்ளன. இதில் இணையத் துன்புறுத்தல், சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்டவையும் அடங்கும். கால் பகுதி ஆபத்தான அல்லது அச்சுறுத்தும் குறும்புகளையும் வழிகாட்டும் வகையில் திருட்டையும் ஊக்குவித்தன. நீக்கப்பட்ட காணொளிகள் பொதுவாக யூடியூபின் சமூக வழிகாட்டுதல்களின்படி, சுய தீங்கு, வெறுப்பு, ஏமாற்றுதல், வன்முறை,மோசமான தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை சிங்கப்பூர் முதன்முதலில் முதல் 10 இடங்கள் பட்டியலில் வந்தது. கிட்டத்தட்ட 640,000 நீக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது.

காணொளி நீக்கங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை அறிக்கை 2019 ஜூலையில் கூகல் முதன்முதலில் வெளியிட்டது. விரும்பத்தகாத காணொளிகளைக் கண்டறிய யூடியூப் செயற்கை நுண்ணறிவு கருவிகளையும் சமூகத்தினர் உள்பட மனித ஆய்வாளர்களையும் பயன்படுத்துகிறது.

அண்மையில், இணையப் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்ற அழைப்புகளுக்குப் பிறகு இணையத் தளங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

அமெரிக்காவின் சுகாதார உயர் அதிகாரி விவேக் மூர்த்தி அண்மையில் சமூக ஊடகப் பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்தார். புகையிலை, மதுபானங்களில் இடம்பெறுவதைப் போன்ற எச்சரிக்கைகள் சமூக ஊடகத் தளங்களிலும் இடம்பெற வேண்டும் என்று அவர் கூறினார், சமூக ஊடகம் இளம் பருவத்தினர் மனநலப் பாதிப்புடன் தொடர்புடையது என்று அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஆகியோர் ஜூன் 21ஆம் தேதி, தங்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், எதிர்மறையான விளைவுகள், மனநலம் மோசமடைவதற்கான தொடர்புகளை ஆய்வுகள் எடுத்துக்காட்டும் வேளையில், சாதனங்களின் பயன்பாட்டின் பழக்கங்களை வடிவமைக்க, குறிப்பாக இளையர்களுக்கு,இன்னும் தீர்க்கமான, பயனுள்ள நடவடிக்கைகள் வேண்டும் எனக் கூறினர்.

சிங்கப்பூரில், இணையப் பாதுகாப்புச் (திருத்தங்கள்) சட்டம் 2023 பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தளங்களுக்கான சட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உள்ளது.

குறிப்புச் சொற்கள்