அருகி வரும் அரிய வகை புறாக்களை இனப்பெருக்கம் செய்து பிலிப்பீன்சுக்குத் திருப்பி அனுப்பி உள்ளது சிங்கப்பூரின் மண்டாய் வனவிலங்குக் குழுமம். சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது என்று அறியப்படுகிறது
பிலிப்பீன்சின் நெக்ரோஸ், பனாய் ஆகிய தீவுப் பிரதேசங்களே அந்த வகைப் புறாக்களின் இருப்பிடம். அவற்றில் நெக்ரோஸில் இருந்து கடந்த 2021ஆம் ஆண்டு மூன்று ஜோடி இனப் பெருக்க புறாக்கள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவற்றின் இனப்பெருக்கத்தை மண்டாய் வனவிலங்குக் குழுமம், பிலிப்பீன்ஸ் சுற்றுப்புற, இயற்கை வளத்துறை, தலாராக் அறநிறுவனம்-நெக்ரோஸ் வனப் பூங்கா ஆகியன மேற்பார்வை செய்து வந்தன.
சிங்கப்பூரின் பேர்ட் பாரடைஸில் இனப்பெருக்கம் வெற்றிகரமான முடிவுற்ற நிலையில் 10 புறாக்களாக அவை பெருகின. அவை அத்தனையும் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16) பிலிப்பீன்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
19ஆம் நூற்றாண்டில் பல்கிப் பெருகத் தொடங்கிய அந்தப் புறா இனம் காடுகள் அழிப்பு, பறவை வர்த்தகம் போன்றவற்றால் அழியத் தொடங்கியது.
தற்போது பிலிப்பீன்சின் இரு தீவுப் பிரதேசங்களில் 70 முதல் 400 புறாக்களே எஞ்சி இருப்பதாக அனைத்துலக பறவையினப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.
மிகவும் அரிதாகக் காணப்படும் அந்தப் புறாக்களின் இதயப் பகுதி கீறப்பட்டு ரத்தம் வழிவதைப் போன்ற சிவந்த கோடு அமைந்திருக்கும். அதனை வைத்து அந்த புறா இனத்தை அடையாளம் காண முடியும்.