தாதிமை இல்லவாசிகள் வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடு

2 mins read
e350de69-1483-4865-bfd7-ff342619c042
சனிக்கிழமை காலையில் வாக்களிக்கச் சென்ற இல்லவாசிகளில் ஒருவரான 97 வயது மயில்வாகனம் சபாபதி, அந்தக் காலத்து தேர்தல் நினைவுகளைப் பகிர்ந்தார். - படம்: கி.ஜனார்த்தனன்

சுதந்திர சிங்கப்பூர் 1968ல் நடத்திய முதல் தேர்தலின்போது அப்போதைய நாடாளுமன்றத்துக்கான அனைத்து 58 இடங்களையும் மக்கள் செயல் கட்சி கைப்பற்றியது.

சிங்கப்பூரர்கள் சனிக்கிழமை (மே 3), நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல் தொடர்பான அந்தக் காலத்து நினைவுகளைச் சனிக்கிழமை காலை வாக்களிக்கச் சென்ற ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசிகளில் ஒருவரான 97 வயது மயில்வாகனம் சபாபதி, தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

சிராங்கூன் வட்டாரத்தில் இளமைக்காலத்தில் தங்கியிருந்தபோது மக்கள் செயல் கட்சி வேட்பாளருக்கு எதிராக இடதுசாரிக் கொள்கை உடையவராகக் கருதப்பட்டவர் தேர்தலில் நின்றதை அவர் நினைவுகூர்ந்தார்.

அந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் நூலிழையில் வென்றதாகத் திரு மயில்வாகனம் கூறினார். “இத்தனை ஆண்டுகளில் சிங்கப்பூர் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை பல்வேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்த ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லவாசிகளில் இவரும் ஒருவர்.

சக்கர நாற்காலி பயன்படுத்த வேண்டிய நிலையிலுள்ள முதியோர் அறுவரை இல்லப் பணியாளர்கள், அருகில் இருக்கும் ஈசூன் அவென்யூ 5 புளோக் 734ல் உள்ள வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.

எஞ்சிய ஒன்பது இல்லவாசிகளை, அவரவர் வீட்டு முகவரிகளுக்கு அருகிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல ஸ்ரீ நாராயண மிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்பாடுகளை இல்லத்தினர் சிறப்பாகச் செய்திருப்பதாக இல்லவாசியும் முன்னாள் வர்த்தக உரிமையாளருமான சூரியகுமரன் சுப்பிரமணியம், 86, தெரிவித்தார்.

முதியோருக்கான ஏற்பாடுகளை நாராயண மிஷன் சிறப்பாகச் செய்திருப்பதாக இல்லவாசி சூரியகுமரன் சுப்பிரமணியம் கூறினார்.
முதியோருக்கான ஏற்பாடுகளை நாராயண மிஷன் சிறப்பாகச் செய்திருப்பதாக இல்லவாசி சூரியகுமரன் சுப்பிரமணியம் கூறினார். - படம்: கி.ஜனார்த்தனன்

“கவனமாகப் பாதுகாப்புடன் நாங்கள் அழைத்துவரப்பட்டோம். எளிதாக வாக்களித்தோம். சிறந்த வேட்பாளர்கள் வெற்றிபெற என் நல்வாழ்த்துகள்,” என்றார் அவர்.

வாக்களிக்க முன்வரும் இல்லவாசிகளை ஆதரித்து அவர்களுக்கு வசதி அளிப்பதாக ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். தேவேந்திரன் தெரிவித்தார்.

“வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் இல்லவாசிகளைப் பராமரிப்பதற்காகப் பணியாளர்களையும் போக்குவரத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்தோம். தேர்தல் துறையும் சக்கர நாற்காலிகளுக்கான சாய்வுத்தளம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து முதியோரும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோரும் வாக்களிக்க உதவியுள்ளது என்று திரு தேவேந்திரன் கூறினார்.

மார்சிலிங்- சைசீ வட்டாரத்தில் சக்கரநாற்காலியைப் பயன்படுத்தும் மூதாட்டியை அந்த இடத்திற்குக் கொண்டுவரும் இல்லப் பணியாளர்.
மார்சிலிங்- சைசீ வட்டாரத்தில் சக்கரநாற்காலியைப் பயன்படுத்தும் மூதாட்டியை அந்த இடத்திற்குக் கொண்டுவரும் இல்லப் பணியாளர். - படம்: சன்லவ் இல்லம்

சன்லவ் இல்லத்திலிருந்து தங்களது வீட்டில் பராமரிப்பு பெறும் முதியோரை அவரவர் வீட்டுக்கு அருகிலுள்ள வாக்குச் சாவடிகளுக்கு சக்கர நாற்காலி வழியாகக் கொண்டு சென்றதாக அந்த இல்லத்தின் மேலாளர் மகாலட்சுமி அண்ணாமலை, 39, தெரிவித்தார்.

“கிட்டத்தட்ட 30 முதியவர்களை நாங்கள் வாக்குச் சாவடிகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுசென்றோம். எளிதாக நடமாட முடியாவிட்டாலும் தங்களால் வாக்களிக்க முடிந்ததை எண்ணி அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்,” என்று திருவாட்டி மகாலட்சுமி கூறினார்.

குறிப்புச் சொற்கள்