சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நன்கொடை வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
டிட்வா புயலால் இலங்கையில் கிட்டத்தட்ட 200 பேர் மாண்டுவிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) முதல் 100,000க்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனமழை, பெருவெள்ளத்தால் 20,000க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம், தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
கிளனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வடக்குப் பகுதிகளில் கனமழை இன்னும் தொடர்கிறது.
இலங்கை பல்லாண்டுக் காலத்தில் எதிர்கொள்ளும் ஆக மோசமான வானிலைப் பேரிடரில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இவ்வேளையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு முதற்கட்டமாக $50,000 உதவி வழங்க உறுதியளித்துள்ளது.
அத்துடன், நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை வழங்குமாறு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) சிங்கப்பூர்வாசிகளை அது கேட்டுக்கொண்டுள்ளது.
டிட்வா புயலால் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் உடனடி ஆதரவு தேவைப்படும் நிலையில் இருப்பதாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத் தலைமைச் செயலாளரும் அதன் தலைமை நிர்வாகியுமான பெஞ்சமின் வில்லியம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து, அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சங்கம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்டோருக்குக் கைகொடுக்கப் பணியாற்றும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்தையும் இழந்த அந்தக் குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கையை மீட்டெடுக்க ஆதரவு வழங்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான நன்கொடைக்குத் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் 100 விழுக்காட்டு வரிக்கழிவு வழங்கப்படும்.
‘கிவிங்.எஸ்ஜி’, ‘பேநவ்’, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பெயரிலான காசோலை ஆகியவை வாயிலாகவோ எண் 15, பினாங்கு லேனில் அமைந்திருக்கும் செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் நேரடியாகவோ நன்கொடையை அளிக்கலாம்.
2026 ஜனவரி 31ஆம் தேதி வரை நன்கொடைத் திரட்டு நடப்பில் இருக்கும்.

