தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம்: சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு

2 mins read
51b29689-23c8-4e21-a135-b0b92549fd3e
குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாஸ்நாயக கீத் ஸ்பென்சர் (இடது). - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் / ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் ஆடவர் மீது, அபாயகரமான ஆயுதத்தால் வேண்டுமென்றே மோசமான காயம் ஏற்படுத்தியதாக திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பாஸ்நாயக கீத் ஸ்பென்சர் எனும் அந்த 37 வயது நபர், திங்கட்கிழமை காலை 10.10 மணிக்கு காணொளிவழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கள ஆடவரான அவர், நீதிமன்ற நடைமுறைகள் நடந்தபோது முகத்தில் உணர்ச்சி ஏதுமின்றி காணப்பட்டார்.

பாஸ்நாயகவின் மனநலனைச் சோதிக்க அவரை மூன்று வாரங்களுக்கு சாங்கி சிறைச்சாலை வளாக மருத்துவ நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாஸ்நாயகவின் வழக்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

அச்சம்பவம் சனிக்கிழமையன்று (நவம்பர் 9) மாலை ஆறு மணியளவில் நிகழ்ந்தது. பாஸ்நாயக, 57 வயது பாதிரியாரான கிறிஸ்டஃபர் லீயைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.

கூட்டுப் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்கப்பட்ட பாதிரியாரின் வாயில் கத்தியால் குத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரின் நாக்கில் எட்டு சென்டிமீட்டர் நீளத்துக்கும் மேல் உதட்டில் மூன்று சென்டிமீட்டர் நீளத்துக்கும் வாயின் ஓரத்தில் நான்கு சென்டிமீட்டர் நீளத்துக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மடக்கும் கத்தியால் பாஸ்நாயக பாதிரியாரைக் குத்தியதாகச் சொல்லப்படுகிறது. அக்கத்தி உட்பட அவரிடம் ஐந்து ஆயுதங்கள் இருந்ததைக் கண்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாஸ்நாயகவுக்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அதோடு, பிறம்படி அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையே, தாக்கப்பட்ட பாதிரியார் கிறிஸ்டஃபர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ (இடது).
மருத்துவமனையில் பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ (இடது). - படம்: வில்லியம் கார்டினல் கோ / ஃபேஸ்புக்

மருத்துவர்கள் அவரைக் கண்காணிக்க ஏதுவாக, அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்