சொந்த பானக் கலனை ஊழியர்கள் போட்டனர்: மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம்

சொந்த பானக் கலனை ஊழியர்கள் போட்டனர்: மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம்

படம்: ஜியாடொங்க888/ டிக்டாக்

02 Nov 2026 - 7:48 pm

2 mins read

சிங்கப்பூரில் பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்தின் மூலம் தனது பராமரிப்பு ஊழியர்கள் ‘இரட்டிப்புச் சம்பளம்’ வாங்குவதாகக் கூறப்படுவதை மரீன் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம் மறுத்துள்ளது.

குப்பைத் தொட்டிகளில் உள்ள காலியான பானக் கலன்களை மறுசுழற்சி இயந்திரங்களில் போடுவதன் மூலம் பராமரிப்பு ஊழியர்கள் கூடுதல் வருமானம் ஈட்டுவதாக அண்மையில் குறைகூறப்பட்டது.

கடந்த மாதப் பிற்பாதியில் ஜியாடொங்888 என்ற பெயரில் டிக்டாக் பயனீட்டாளர் ஒருவர் பதிவிட்ட காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவியது.

அதில், மரீன் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றத்தின் சின்னம் இருந்த சட்டையை அணிந்திருந்த ஊழியர்கள் இருவர், குப்பைப் பையில் இருந்த காலியான பானக் கலன்களை மறுசுழற்சி இயந்திரத்தில் ஒவ்வொன்றாகப் போட்டனர்.

திங்கட்கிழமை (நவம்பர் 2) நிலவரப்படி அந்தக் காணொளியை 106,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதற்கு 1,200க்கும் அதிகமானோர் விருப்பக் குறியும் இட்டுள்ளனர்.

நகர மன்ற ஊழியர்கள் பானக் கலன்களைச் சேகரித்து அதன்மூலம் வரும் தொகையைப் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் அனுமதித்ததாகக் காணொளியின் பின்னணியிலிருந்து ஒருவர் கூறுவதும் பதிவானது

ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின்கீழ் தீவெங்கும் உள்ள மறுசுழற்சி இயந்திரங்களில் திரும்பக் கொடுக்கப்படும் ஒவ்வொரு காலியான பானக் கலனுக்கும் 10 காசு முன்பணத்தைப் பயனீட்டாளர்கள் பெறுவர்.

காணொளியைப் பதிவிட்டவர், இரண்டாவது நாளாக அந்த ஊழியர்கள் அதுபோல பானக் கலன்களை இயந்திரத்தில் போடுவதைப் பார்ப்பதாகக் கூறினார்.

அதற்கு இம்மாதம் 1ஆம் தேதி பதிலளித்த மரீன் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம், காணொளி குறித்து அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டது.

ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்திய பானக் கலன்களைத்தான் மறுசுழற்சி இயந்திரத்தில் போட்டதாக விளக்கம் அளித்த நகர மன்றம், குடியிருப்பாளர்கள் சிலரும் நேரடியாக அத்தகைய கலன்களை அவர்களிடம் கொடுத்ததைச் சுட்டியது.

வேலை நேரம் முடிந்த பிறகே ஊழியர்கள் இயந்திரத்தில் கலன்களைப் போட்டனர் என்றும் குப்பைத் தொட்டிகளில் காலியான கலன்களைத் தேட தமது ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சொன்னது.

குறிப்புச் சொற்கள்