வரும் பொதுத் தேர்தலில் மசெக வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை: வோங்

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவும்

வரும் பொதுத் தேர்தலில் மசெக வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை: வோங்

3 mins read
b7e0d335-3039-44b3-ac88-50652a2abc8c
மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) அக்கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரும் பிரதமருமான லாரன்ஸ் வோங உரையாற்றினார். - படம்:மசெக ஊடகப் பிரிவு

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (மசெக) வெற்றிபெற்று நிலையான அரசாங்கம் அமைந்திடும் என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கட்சியினரிடம் எச்சரித்துள்ளார்.

வரும் 2025ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் சவால் அதிகம்; வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்றார் அவர்.

மசெக மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) உரையாற்றிய திரு வோங், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஒருவேளை ஆளுங்கட்சிக்கு எதிராக மிதமான வகையில் மக்களின் வாக்குகள் செல்ல நேரிட்டால் சிங்கப்பூரில் பலவீனமான அரசாங்கம் அமையும் அபாயம் உள்ளது என்று கூறினார்.

“சிங்கப்பூரர்கள், மசெக அரசாங்கம் அமைத்து, ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இருப்பினும், நாடாளுமன்றத்தில் அதிக எதிர்க்குரல்களும் வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

“அதிக அளவிலான எதிர்க்குரல்கள் ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், நிலையான, நல்ல அரசாங்கத்தை இழக்கக்கூடிய அபாயத்தை நாம் எதிர்நோக்குகிறோம்,” என்றார் திரு வோங்.

முடிந்தவரை மக்களுக்கு உதவும் அரசாங்கம்

உலகளாவிய பொருளியல் மந்தநிலையின் மோசமான விளைவுகளிலிருந்து சிங்கப்பூரர்களுக்கு உதவ, அரசாங்கமாக, கட்சியாக, மசெக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்று குறிப்பிட்டார் திரு வோங்.

“உலகளாவிய பொருளியல் மந்தநிலை அதிகரித்து வரும் இவ்வேளையில் நாடுகள், உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம் தொடர்பான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. சிங்கப்பூரிலும் அந்தத் தாக்கம் உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களிடம் நல்ல தீர்வுகள் இல்லாவிட்டாலும், இந்தப் பிரச்சினையை மசெக-விற்கு எதிரான உணர்வுகளாக மாற்றுவதற்குப் பயன்படுத்த முனைந்தன,” என்று அவர் கூறினார்.

எனினும் இவை உலகளாவிய பணவீக்கப் போக்குகள் என்பதைச் சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்வார்கள் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார் திரு வோங்.

கடந்த சில ஆண்டுகளாகப் பெருந்தொகை ஒதுக்கி, உதவித் தொகுப்புகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் பிரதமர். மேலுமொரு சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் உதவித் திட்டத்துடன், கூடுதல் உதவிகளும் வரவிருக்கும் மாதங்களில் சிங்கப்பூரர்களை வந்தடையும் என்றும் அறிவித்த அவர், வரவுசெலவுத் திட்டம் 2025க்கான ஆயத்தப் பணியில் தாம் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நீடித்த உரையில், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். உலக அரங்கில் ஒரே குரலாய் ஒலித்திடவும் ஆபத்து மிகுந்த உலகில் தொடர்ந்து ஒன்றுபட்ட மக்களாகத் திகழ்ந்திடவும் கோரிக்கை விடுத்தார்.

“சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை வென்று, சக சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்ற கடின உழைப்பு முக்கியம். இது பொதுத் தேர்தலுக்குமுன் நடைபெறும் கட்சியின் கடைசி மாநாடு. செயல்களால் மக்களின் நம்பிக்கையை, மனங்களை வெல்லப் போராட வேண்டும்,” என்று மசெக உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

தேசத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இளைய வேட்பாளர்களை மசெக பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசிய அவர், தலைமைத்துவத்தில் பல மாற்றங்களைக் கட்சி நடைமுறைப்படுத்தியுள்ளதாகச் சொன்னார்.

“பின்னால் இருந்து இயங்குவதைக் காட்டிலும், நம் கொள்கைகளை மக்களுக்கு விளக்கவும் சிங்கப்பூரர்களுக்கான அக்கறைக்குரிய அம்சங்களை நாமும் கவனத்தில் கொள்கிறோம் என்று அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் முனைப்புடன் செயலாற்றுவது முக்கியம்,” என்றும் வலியுறுத்தினார்.

தலைமைத்துவத்தில் இளையர் அலை வீசிடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், சிங்கப்பூருக்கான அடுத்த தலைமைக் குழுவை உருவாக்கக்கூடிய இளம் வேட்பாளர்களை அடையாளம் காண்பது, தாம் விரைந்து மேற்கொள்ளவேண்டிய பணி என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்