தியோ சியோவ் ஹியோங்கிற்கு அன்றாடம் மாலைவேளைகளில் பூங்காவில் ஓடுவதும் நடனம் ஆடுவதும் மிகவும் பிடித்தமான பழக்கவழக்கங்கள். ஆனால், முதுகின் கீழ்ப்பகுதியில் நரம்பில் ஏற்பட்ட அழுத்தம், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
“முதுகின் கீழ்ப்பகுதியில் வலி தொடங்கியது. என் இடக்கால் மரத்துப்போனது. அது என் கால் போலவே தோன்றவில்லை,” என்றார் ஓய்வுபெற்ற பொறியாளரான 75 வயது திரு தியோ.
“என் குடும்பத்தாருடன் தாய்லாந்துக்குச் சென்றபோது நடப்பதற்குச் சிரமப்பட்டேன்,” என்றார் அவர்.
திரு தியோ முதலில் கலந்தாலோசித்த மருத்துவர், அவரை உடலியக்க சிகிச்சை நிபுணரிடம் செல்லுமாறு பரிந்துரைத்தார். திரு தியோ உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும் கைகால்களை நீட்டவேண்டும் என்றும் அந்த நிபுணர் கூறினார்.
ஆனால் வலி தொடர்ந்தது. இடக்காலில் உணர்வை இழக்கத் தொடங்கினார். அவரால் நீண்ட நேரத்துக்கு நடக்கமுடியவில்லை. அப்போது அவர் தேசிய நரம்பியல் கழகத்தின் நரம்பியல் மருத்துவ நிபுணர் தாமஸ் டானைச் சென்று பார்த்தார்.
டாக்டர் டானின் ஆலோசனைப்படி, திரு தியோ பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவரின் பிரச்சினைக்குத் தண்டுவடச் சிதைவே காரணம் என்பதை மருத்துவர் கண்டறிந்தார்.
அவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்வது என முடிவானது. ஆனால் சிகிச்சையின்போது நோயாளி விழித்த நிலையில் இருப்பார். இது ‘அவேக் எண்டோஸ்கோபிக் ஸ்பைன் சர்ஜரி’ என்று வழங்கப்படுகிறது.
இதில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்புகளை நசுக்கும் சுருங்கிய நிலையில் உள்ள முதுகின் கீழ்ப்பகுதி, சேதமடைந்த முதுகெலும்பு வட்டுகள், நடுமுதுகில் ஏற்படும் நரம்பு அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கின்றனர். நோயாளி முழு உணர்வுடன் இருக்கும்போதே, ‘கீஹோல்’ எனப்படும் சிறிய துளையின்வழி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
நோயாளி விழித்திருக்கும்போது, அறுவை சிகிச்சை செய்வது பாதுகாப்பானது என்று மருத்துவர் டான் நம்புகிறார்.
இத்தகைய சிகிச்சை முறைகள் இங்கு அதிக வரவேற்பைப் பெற்றுவருகின்றன; ஏனெனில் இவற்றால் நோயாளிகள் விரைவில் குணமடைய முடிகிறது; அத்துடன், அறுவை சிகிச்சைக்குப் பிந்திய வலியும் குறைகிறது. மேலும், மயக்க மருந்து தொடர்பான சிக்கல்களால் பாரம்பரிய முறைப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாத முதியவர்கள் அல்லது அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இது சிறந்த மாற்றாக அமைகிறது.
2025ஆம் ஆண்டில் திரு தியோவுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீடித்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் வலியின்றி எழுந்து நடமாடினார்.
சிகிச்சை முடிந்த நாளிலேயே திரு தியோ வீடு திரும்பினார்.
இன்று, அவர் மீண்டும் மாலையில் மெதுவோட்டத்திலும் தாய்ச்சி பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.
“காயம் மிகவும் சிறியதாக இருந்ததால், எனக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை நடந்தது என்பதையே நான் சில நேரங்களில் மறந்துவிடுகிறேன். எனது வாழ்க்கையை எனக்கு மீட்டுக் கொடுத்ததற்காக இந்த மருத்துவக் குழுவிற்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்று திரு தியோ கூறினார்.

