விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க தாய்லாந்து சென்ற ஒரு சிங்கப்பூர்க் குடும்பம், மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
தங்கியிருந்த விடுதி அறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால், குடும்பத்தில் உள்ள மூவரும் மயக்க நிலையை அடைந்தனர்.
பேங்காக்கிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மணிநேர பயணத் தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில், இளம் தம்பதியினர் தங்கள் மகனுடன் தங்கியிருந்தனர்.
புதன்கிழமை (டிசம்பர் 11) அன்று தங்களின் பத்து வயது மகனுடன் விடுதி அறைக்குள் மாலை ஆறு மணியளவில் தம்பதி சென்றதாகக் கூறப்படுகிறது.
அன்றிரவு ஒன்பது மணியளவில் மூவரும் மயங்கிக் கிடந்ததை தம்பதியின் நண்பர் ஒருவர் கண்டுபிடித்தார்.
இரவு உணவுக்காக அறையில் இருந்த குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கக் கதவைத் தட்டிய நண்பர், மூவரும் நினைவிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டார்.
குளிர் காரணமாக குளிப்பதற்கு முன்னர் எரிவாயுவைக் கொண்டு இயங்கும் நீர் சூடேற்றும் சாதனத்தை அவர்கள் இயக்கியதாக நம்பப்படுகிறது.
அந்தச் சாதனத்திலிருந்து எரிவாயு கசிந்தததாக கூறப்படுகிறது.
மலையின் கீழே அமைந்துள்ள தேசிய பூங்கா பிரிவின் உதவி நாடப்பட்டது. அங்கிருந்த மீட்புப்பணியாளர்கள் மயக்கநிலையில் இருந்த குடும்பத்திற்கு முதலுதவி வழங்கினர்.
பின்னர் அவசர மருத்துவ சிகிச்சை வாகனம் மூலம் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்குடும்பம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity