வூஹான் கிருமித் தொற்று: சிங்கப்பூரில் பரிசோதிக்கப்படும் மூன்றாவது நபர்

சீனாவின் வூஹான் நகருக்குச் சென்று திரும்பிய 69 வயது ஆடவருக்கு நிமோனியா கிருமி தொற்றி இருப்பதாக இன்று (ஜனவரி 16) மாலை சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அடுத்தகட்ட பரிசோதனையிலும் சிகிச்சையிலும் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

இருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கிருமித் தொற்று காணப்படும் ஹுவானான் கடலுணவு மொத்தவிலை சந்தைக்கு அவர் சென்றிராத போதிலும் தற்போது பரவி வரும் வூஹான் கிருமித் தொற்றோடு தொடர்புடையவரா என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

வூஹான் கிருமித் தொற்று தொடர்பில் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் இவர்.

ஏற்கெனவே, மூன்று வயது சிறுமியும் 26 வயது சீன நாட்டவரும் சந்தேகத்தில் வைக்கப்பட்டு சோதிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.

மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத் தலைநகரான வூஹானுக்கு இவ்விருவரும் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது. 

வூஹான் கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்று மேலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த அந்த ஆடவர் சீனாவுக்கு வெளியே அவ்வாறு உறுதி செய்யப்படும் இரண்டாவது நபர் ஆவார்.

#தமிழ்முரசு #வூஹான் #சீனா #ஜப்பான் #சிங்கப்பூர்