சுடச் சுடச் செய்திகள்

வூஹான் வைரஸ்: மனிதர்களுக்கிடையே தொற்றும் அபாயம்; 200  பேருக்கு மேல் பாதிப்பு

சீனாவில் ‘சார்ஸ்’ போன்றதொரு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிட்டது. அந்த பாதிப்பு, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தொற்றுவதற்குச் சான்று கிடைத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட பலரையும் சோதனைக்கு உட்படுத்தியதில் கடந்த வார இறுதியில் மட்டும் மேலும் 139 பேர் அந்தப் புதுமையான ‘வைரஸ்’ கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தக் கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

மத்தியப் பகுதியான வூஹானில் தொடங்கிய அந்தக் கிருமித் தொற்று இப்போது சீனத் தலைநகர் பெய்ஜிங், தென்பகுதியிலுள்ள குவாங்டொங் மாநிலம் வரை பரவிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தென்கொரியாவும் அந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள முதல் மனிதரை அடையாளம் கண்டுள்ளது. முன்னதாக, தாய்லாந்திலும் ஜப்பானிலும் அந்தப் பாதிப்பு இருந்தது கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

‘2019-nCoV’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அந்த ‘கொரோனா வைரஸ்’, 17 ஆண்டுகளுக்குமுன் கிட்டத்தட்ட 800 பேரின் உயிரைப் பறித்த ‘சார்ஸ்’ கிருமியை ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தக்  கிருமி எங்கிருந்து தோன்றியது, எப்படிப் பரவுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீனப் புத்தாண்டு விடுமுறையொட்டி அதிகமான பயணிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை முதல் சீனாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

#தமிழ்முரசு #வூஹான் #சீனா #வைரஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon