சுடச் சுடச் செய்திகள்

15 மணி நேரம் நீடித்த சுவா சூ காங் தீ

ஒரு காற்பந்துத் திடல் அளவில் உள்ள திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த மரக்கழிவில்  இன்று (பிப்ரவரி) தீ மூண்டதில் அதன் பிழம்பு நான்கு மாடி உயரத்துக்குக் கிளம்பியது.

அந்தத் தீயை அணைக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்களுக்கு 15 மணி நேரம் பிடித்தது.

எண் 131, லோரோங் செமாங்கா, சுவா சூ காங் எனும் முகவரியில் உள்ள அந்தத் திறந்தவெளியில் நேற்று அதிகாலை 1.30 மணிக்குத் தீ மூண்டது என்றும் அந்த மரக்கழிவை ஒரு நிறுவனம் அந்த  இடத்தில் போட்டிருக்கிறது என்றும் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தின் பெயர் என்ன என்று தெரிவிக்க மறுத்துவிட்ட அந்த அதிகாரி, இதன் தொடர்பான மேல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

காய்ந்த புதர்களும் காற்றோட்டமான வானிலையும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியை மேலும் கடுமையாக்கியது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலிஸ் கூறியது. 

ஜூரோங் வெஸ்ட் பகுதியில் வசிக்கும் பலரால் இன்று காலை முதல் தீப்புகையை நுகர முடிந்தது. அது இந்தோனீசியாவின் காட்டுத் தீச் சம்பவங்களிலிருந்து வருகிறது என்று அந்தக் குடியிருப்பாளர்கள் நினைத்திருந்தனர். 

காலை 9.30 மணி வரை குடிமைத் தற்காப்புப் படை 50 தீயணைப்பு வீரர்களையும் ஆறு அவசரகால வாகனங்களையும் தீயணைப்புப் பணிக்குப் பயன்படுத்தியிருந்தது. 

தீயைக் கட்டுப்படுத்த நீரைப் பீய்ச்சியடிக்கும் ஐந்து சாதனங்களும் தீப்பிடித்திருக்கும் மரக்கழிவுகளில் இடைவெளியை ஏற்படுத்த அகழ் பொறிகளும் பயன்படுத்தப்பட்டன. 
2018ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் புதர்த் தீச்சம்பவங்கள் அதிகரித்திருந்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது வருடாந்திர தீச்சம்பவங்கள் தொடர்பான ஆண்டறிக்கையில் கூறியது. 
கடந்த ஆண்டில் 883 புதர்த் தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon