சிங்கப்பூரில் நாளுக்கு சுமார் 3,000 சோதனைகள்; பெரும்பாலானவை வெளிநாட்டு ஊழியர்களுக்கு செய்யப்படுகின்றன

சிங்கப்பூரில் நாளுக்கு சுமார் 3,000 சோதனைகள்; பெரும்பாலானவை வெளிநாட்டு ஊழியர்களுக்கு செய்யப்படுகின்றன

2 mins read
2e3c1b16-6b91-45cc-b5c2-1d60185aeda8
இதுவரை, 5,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய பேராசிரியர் மாக், அதையும்விட அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

"மிகுந்த உத்திபூர்வ வழியை," கிருமித்தொற்று பரிசோதனைக்கு சிங்கப்பூர் கொண்டிருப்பதாக அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்றைய (ஏப்ரல் 21) செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

மில்லியன் கணக்கான சிங்கப்பூரர்கள் இருப்பதால் அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடியாத நிலையில், குறிப்பிட்ட முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோர், பணிக்குச் செல்லும்போது கிருமித்தொற்றைப் பரப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை உதாரணமாகக் குறிப்பிட்டார் அ வர்.

சமூகத்தில் கிருமிப் பரவலைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அங்கொன்று இங்கொன்றான முறையில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கிருமித்தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

அவ்வாறு அறிகுறிகள் ஏதும் தென்படாத, நல்ல உடல் நலத்துடன் இருப்போருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் மிகக் குறைந்த அறிகுறிகள் தென்படுவோரால் சமூகப் பரவல் ஏற்படும் சாத்தியம் தெரியவந்துள்ளதாக திரு கான் குறிப்பிட்டார்.

அத்தகைய பரவலையும் தடுத்து நிறுத்த, நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான இந்த அதிரடி நடவடிக்கைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அவசியம் என்றார் அவர்.

சிங்கப்பூரில் தினமும் 2,800 முதல் 3,000 வரையிலான கிருமித்தொற்று பரிசோதனைகள் செய்யப்படுவதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர், இணைப் பேராசிரியர் கென்னத் மாக், அவற்றில் 1,500 முதல் 2,500 வரையிலான பரிசோதனைகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

இதுவரை, 5,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய பேராசிரியர் மாக், அதையும்விட அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

பரிசோதனைகளில் மாறுபட்ட பரிசோதனைக் கருவிகள், பரிசோதனை முறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறிய திரு கான், நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகான நிலைமையைக் கையாள, வெளிநாடுகளிலிருந்து பரிசோதனை கருவிகளை வாங்கவும் எண்ணம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

"சமூகத்தில் கிருமிப் பரவல் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்," என்று திரு கான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்