3 வயது குழந்தைக்கு கிருமித்தொற்று; சுமார் ஒரு மாத காலமாகத் தொடரும் சிகிச்சை

3 வயது குழந்தைக்கு கிருமித்தொற்று; சுமார் ஒரு மாத காலமாகத் தொடரும் சிகிச்சை

1 mins read
0427e146-c9d9-4855-b4d9-97143931f385
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டுள்ளதாகக் கூறப்படும் சிறுவர், இளம்பருவத்தினர் 50 பேரில் எட்டு குழந்தைகள் ஒரு வயதும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித் தொற்றினால் மொத்தம் 50 குழந்தைகளும் இளம் பருவத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பாதி பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மிக நீண்டகாலமாக 29 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று வயது (சம்பவம் 582), பெண் குழந்தையும் ஒருவர்.

சிங்கப்பூரரான அந்தக் குழந்தைக்கு சென்ற மார்ச் 24ஆம் தேதி கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தொற்று உறுதியானதும் அந்தக் குழந்தை கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டார்.

பெற்றோரிடம் இருந்து அக்குழந்தைக்கு கிருமி தொற்றியதாகக் கூறப்படுகிறது. மூவரும் அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியபொழுது தொற்று கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.

பின்னர் ஏப்ரல் 6, 9 ஆகிய தேதிகளில் மருத்துவமனையில் இருந்து பெற்றோர் வீடு திரும்பிவிட்டனர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டுள்ளதாகக் கூறப்படும் சிறுவர், இளம்பருவத்தினர் 50 பேரில் எட்டு குழந்தைகள் ஒரு வயதும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள்; 13 பேர் ஒன்று முதல் 6 வயது வரையுள்ளவர்கள்.

ஏழு முதல் 12 வயது வரையுள்ள குழுந்தைகளின் எண்ணிக்கை 22. எழுவர் 13 முதல் 16 வயது வரையுள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்