சமூகத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
ஆனால், அத்தகைய அபாயம் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது என்று குறிப்பிட்ட திரு கான், தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் உள்ள 111 புளோக்கில் ஏற்பட்ட கிருமித்தொற்று குழுமத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
அந்த புளோக்கின் இரு வேறு தளங்களில் வசித்த இரு குடும்பங்களில் மொத்தம் 9 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. இரு குடும்பத்தாருக்கும் தொடர்பு இல்லை என்றாலும் மின்தூக்கிகள், மாடிப் படிக்கட்டுகள் போன்றவை இரு வீடுகளுக்கும் பொதுவானவை.
ஆனால், இவ்விரு குடும்பங்களுக்கும் இடையிலான கிருமித்தொற்று தொடர்பு என்ன என்பதை உறுதிபடக் கூற முடியவில்லை என்றது, கொவிட்-19ஐ கையாளும் அமைச்சர்நிலை பணிக்குழு.
அந்த புளோக்கின் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 118 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்று இல்லை என்பது தெரியவந்ததாகவும் திரு கான் குறிப்பிட்டார்.
"நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்ட திரு கான், கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்தால், நாம் மிகப்பெரிய பிரச்சினையைக் கையாள வேண்டியதிருக்கும் என்றார்.
தேவை ஏற்பட்டால் இன்னொரு முறை அதிரடி கட்டுப்பாடுகள் (சர்க்கியூட் பிரேக்கர்) விதிக்கப்படும் சாத்தியமும் உண்டு என்று, அமைச்சர்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்காமல் இருக்க முயற்சி செய்வோம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பரிசோதனைகளை விரிவுபடுத்துவது, குறிவைத்து விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் அவர்.


