கொவிட்-19 காரணமாக வேகமாக மாறிவரும் கல்வி, வேலை சூழல் மாணவர்களுக்கு வழிகாட்ட கல்வி அமைச்சு புது ஏற்பாடு

கொவிட்-19 காரணமாக வேகமாக மாறிவரும் கல்வி, வேலை சூழல் மாணவர்களுக்கு வழிகாட்ட கல்வி அமைச்சு புது ஏற்பாடு

2 mins read
0ba1eada-80c9-40a5-a27a-fa94066d86bf
கோப்புப்படம்: லியன்ஹ வான்பாவ் -

வேகமாக மாறிவரும் கல்வி மற்றும் வேலை சூழலைத் திறம்படக் கையாள மாணவர்களுக்கு உதவ, வாழ்க்கைத் தொழில் வழிகாட்டுதலைக் கல்வி அமைச்சு மேம்படுத்தவுள்ளது.

கொவிட்-19 காரணமாக வேலை வாய்ப்புகளில் நிச்சயமற்ற சூழல் நிலவிவரும் வேளையில், இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

தொடக்கக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் கல்வி, வாழ்க்கைத் தொழில் குறித்து வழிகாட்டும் ஆலோசகர் ஒருவர் இருப்பார். இரண்டு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஓர் ஆலோசகர் நியமிக்கப்படுவார். கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று இந்த விவரங்களை அறிவித்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காணொளிக் காட்சி வழியாக கல்வியாளர்களிடம் நேற்று உரையாற்றிய திரு வோங், தனிச்சிறப்புமிக்க பணியை ஆற்றி வரும் அவர்களுக்கு நன்றி கூறினார்.

எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாணவர்களுக்கு ஆதரவளிக்க பள்ளிகளில் மாணவர் நல அதிகாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

ஆசிரியர்கள், இதர பள்ளி ஊழியர்கள் ஆகியோருடன் சேர்ந்து இந்த அதிகாரிகள் அணுக்கமாகப் பணியாற்றுவர்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி பள்ளிகளில் ஆலோசகர்கள் மற்றும் மாணவர் நல அதிகாரிகளின் எண்ணிக்கை கட்டங்கட்டமாக உயர்த்தப்படும்.

இதுபோக, அடுத்த சில ஆண்டுகளில் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் முதன்மை ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் கொள்கை வகுப்பு, ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுவது போன்றவற்றில் முதன்மை ஆசிரியர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள் கல்வி அமைச்சின் தலைமையகத்தில் பணியாற்றுகின்றனர். வகுப்பறை நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பள்ளிகளிலும் பணியமர்த்தப்படுகின்றனர்.

பள்ளிகளில் பணியமர்த்தப்படும் முதன்முறை ஆசிரியர்கள், கற்பித்தல், பாடத் திட்டமிடுதல், பள்ளிகளில் தொழில்முறை மேம்பாட்டுக் குழுக்களை வழிநடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.

பள்ளிகளில் முதன்மை ஆசிரியர்களைப் பணியமர்த்துவது ஒரு முக்கிய ஏற்பாடு என்று அமைச்சர் வோங் வர்ணித்தார். கற்பித்தல் துறையை வலுப்படுத்துவதில் கல்வி அமைச்சு கொண்டிருக்கும் கடப்பாட்டை இது பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

முதன்மை ஆசிரியர்களில் சிலர் அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர். காலப்போக்கில் அவர்களது எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்