தீபாவளியை முன்னிட்டு சட்டவிரோதமாக வாண வெடிகளை வெடித்தால் கடும் நடவடிக்கை: சிங்கப்பூர் போலிஸ் எச்சரிக்கை

தீபாவளியை முன்னிட்டு சட்டவிரோதமாக வாண வெடிகளை வெடித்தால் கடும் நடவடிக்கை: சிங்கப்பூர் போலிஸ் எச்சரிக்கை

1 mins read
33e8aea6-2c85-44f6-b11d-0f34a94eb7d6
தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள வேளையில், சிராங்கூன் ரோடு வழியாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த துணை போலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

தீபாவளி நெருங்கி வரும் வேளையில், சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பட்டாசு மற்றும் வாணவெடிகள் வெடிக்க வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத வாணவெடிகள் பொதுமக்களுக்கும் அவர்களது சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்ட போலிசார், சட்டவிரோதமாக வாணவெடிகள், பட்டாசுகள் வைத்திருப்பது, அவற்றை வெடிப்பது போன்ற குற்றங்களுக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, $50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றனர்.

தீபாவளியை முன்னிட்டு போலிசார் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றன.

சட்டவிரோதமாக வெடிபொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாணவெடிகளை வெடிக்க வேண்டாம் எனவும் அவற்றால் தீப்பற்றும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு அது அச்சுறுத்தலாக அமையும் எனவும் போலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தகைய வாணவெடிகள் வெடித்தாலோ, அதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், சேதம் ஏற்பட்டாலோ ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம்.

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள வேளையில், சிராங்கூன் ரோடு வழியாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த துணை போலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்